Tamil Sanjikai

தொலைத் தொடர்பு உள்ளிட்ட சேவைகளுக்காக பல்வேறு செயற்கைக்கோள்களை இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ விண்ணில் செலுத்தியுள்ளது. இந்த வரிசையில், அதிவேக இணையதள சேவைகளை வழங்குவதற்காக 40 நவீன டிரான்ஸ்பாண்டுகள் பொருத்தப்பட்ட ஜிசாட்-11 செயற்கைக்கோளை விஞ்ஞானிகள் வடிவமைத்தனர். இந்த செயற்கைக்கோள் கடந்த மே மாதம் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டது. ஆனால், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஏவுதளத்திலிருந்து ஜிஎஸ்எல்வி எஃப்-8 ராக்கெட் மூலம் மார்ச் மாதத்தில் விண்ணில் செலுத்தப்பட்ட ஜிசாட் 6ஏ செயற்கைகோள் கண்காணிப்பு வளையத்தில் இருந்து பிரிந்து போனது.

இதையடுத்து, ஜூன் மாதத்தில் விண்ணில் ஏவப்பட இருந்த ஜிசாட்-11 செயற்கைக்கோளை தென் அமெரிக்காவின் பிரெஞ்சு கயானாவில் இருந்து திரும்பப் பெற்ற இஸ்ரோ விஞ்ஞானிகள், அதில் பொருத்தப்பட்டிருந்த அனைத்து கருவிகளையும் மீண்டும் ஒரு முறை சரிபார்த்தனர்.அதைத் தொடர்ந்து, பிரெஞ்ச் கயானாவில் இருந்து ஏரியன்ஸ்பேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஏரியன்-5 ராக்கெட் மூலம் ஜிசாட் 11 செயற்கைக்கோள் இன்று அதிகாலை 2:07 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. அத்துடன், தென்கொரியாவின் புவி ஆய்வு செயற்கைக்கோளும் செலுத்தப்பட்டது. இந்த செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. 5,854 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள், இஸ்ரோ இதுவரை தயாரித்த செயற்கைக்கோள்களில் அதிக எடைகொண்டதாகும். இதன்மூலம், இந்தியாவின் நிலப்பகுதியிலும், அருகில் உள்ள தீவுகளிலும் இணையதள வேகம் அதிகரிக்கப்படும் என்றும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

விநாடிக்கு 16 ஜிகாபைட் என்ற வேகத்தில் டேடா-வை வழங்க முடியும். இந்த செயற்கைக்கோளின் ஆயுட்காலம் 15 ஆண்டுகள் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். செயற்கைக்கோள் ஏவுவதை பிரெஞ்ச் கயானாவில் நேரில் பார்வையிட்ட இஸ்ரோ தலைவர் சிவன், ஜிசாட்-11 விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். அடுத்த ஆண்டில் ஜிசாட்-20 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட உள்ளதாகவும், ஏற்கனவே ஏவப்பட்ட ஜிசாட்-19, 29 ஆகிய இரண்டு செயற்கைக்கோள்கள், தற்போது செலுத்தப்பட்டுள்ள ஜிசாட்-11 மற்றும் அடுத்தாண்டு ஏவப்படும் ஜிசாட்-20 செயற்கைகோள் ஆகியவற்றின் மூலம் விநாடிக்கு 100 ஜிகாபைட் வேகத்தில் இணையதள சேவையை வழங்க முடியும் என்றும் சிவன் தெரிவித்தார்.

0 Comments

Write A Comment