Tamil Sanjikai

இந்த பூமியில் ஓர் இடத்தைக் குறிப்பிட்டு, அதனை பூகோளரீதியாக வரைபடத்தில் குறிப்பிட்டு அதை செயற்கைக்கோள் மூலம் அடையாளம் காண பயன்பட்டு வரும் அமெரிக்காவின் 'ஜிபிஎஸ்' தொழில்நுட்பத்துக்கு பதிலாக, இந்தியா விரைவில் தமது சொந்த கண்டுபிடிப்பான 'நேவிக்' தொழில்நுட்பத்தை பயன்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..

பூமியில் உள்ள குறிப்பிட்ட இடத்தை அடையாளம் காண இதற்கென பிரத்யேகமாக செலுத்தப்பட்டுள்ள செயற்கைக்கோள்கள் வாயிலாக அறிந்துகொள்ள அமெரிக்காவின் ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தை தான் இந்தியா இதுவரை பயன்படுத்தி வருகிறது.

இதன் மூலம் நம்முடைய அன்றாடத் தேவைகளான பாதையறிவது, விமானங்கள் பயணம் செய்வது, அவை செல்லவேண்டிய இடத்தை, பறந்த நிலையிலேயே கண்டறிவது, வாகனங்கள் தொலைந்து போனால் கண்டறிவது, கடலில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு பாதையையும், எல்லை கடப்பதையும் தெரிந்துகொள்வது போன்ற பயன்பாடுகளுக்கு 'ஜிபிஎஸ்' கருவி பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதற்கென பிரத்யேக ராணுவ பயன்பாடுகளும் உள்ளன. போர் விமானங்கள் குறிபார்த்து இலக்கை சுடுவது, ராணுவ பீரங்கிகள் குறிபார்த்து இலக்கை தாக்குவதற்கு ஜிபிஎஸ் பயன்படுகிறது. கார்கில் யுத்தத்தின்போது அமெரிக்க அரசு ராணுவ பயன்பாட்டிற்கான ஜிபிஎஸ் கருவி மற்றும் செயற்கைக்கோள் போன்றவற்றில் நமக்கு உரிய முறையில் உதவாமல் நம்மைக் கைவிட்டது.

இதையடுத்து அப்போது பதவியிலிருந்த அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசு, இந்தியாவிற்கென ஜிபிஎஸ் போன்ற புவியில் எந்த இடத்தையும் அடையாளம் காண உதவும் பிரத்யேக செயற்கைக்கோள் கட்டமைப்பினை உருவாக்கும்படி இஸ்ரோவைப் பணித்தது.

இஸ்ரோவும் அதற்குரிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்தது. இதற்கென ஏழு செயற்கைக்கோள்கள் கொண்ட கட்டமைப்பை விண்ணில் அமைக்க வேண்டியிருந்தது. தற்போது அந்த பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், விரைவில் இந்தியாவின் சொந்த தயாரிப்பான புவியில் எந்த இடத்தையும் செயற்கைக்கோள் உதவியுடன் அடையாளம் காண உதவும் 'நேவிக்' வழிகாட்டி தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இந்நிலையில், இந்த நேவிக் கருவிகள் நாட்டின் சொந்த தயாரிப்பு என்பதால் அனைத்து மொபைல்போன்கள் மற்றும் வாகனங்கக்கு பதிலாக இதனை உபயோகப்படுத்த இஸ்ரோ நடவடிக்கை எடுத்து வருகிறது.

எனவே விரைவில் அமெரிக்க அரசின் கட்டுப்பாட்டில் இருந்து வரும் 'ஜிபிஎஸ்' கருவிகளுக்கு பதிலாக சொந்த தயாரிப்பான 'நேவிக்' கருவிகளை உபயோகிக்கும் உத்தரவு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 Comments

Write A Comment