புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் உள்ளிட்ட 31 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி43 ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான 28 மணிநேர கவுன்ட் டவுன் இன்று அதிகாலை 5.58 மணிக்கு தொடங்கியுள்ளது. புவி கண்காணிப்புக்கான ஹைபர் ஸ்பெக்ட்ரல் இமேஜிங் என்ற செயற்கைகோளை இந்திய விண்வெளி ஆய்வு மையம் வடிவமைத்துள்ளது. இந்த செயற்கைக்கோள், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி சி43 ராக்கெட் மூலம் நாளை காலை 9.58 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது. இதனுடன், வெளிநாடுகளுக்கான 30 சிறு செயற்கைகோள்களும் விண்ணில் செலுத்தப்படுகின்றன. இதில், அமெரிக்காவைச் சேர்ந்த 23 செயற்கைகோள்களும், ஆஸ்திரேலியா, கனடா, ஸ்பெயின், மலேசியா, கொலம்பியா, பின்லாந்து, நெதர்லாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த தலா ஒரு செயற்கைகோளும் இடம்பெறுகின்றன.
ஹைபர் ஸ்பெக்ட்ரல் இமேஜிங் செயற்கைகோளை புவி வட்டப்பாதையில் 630 கிலோ மீட்டர் தொலைவிலும், மற்ற 30 செயற்கைகோள்களை 504 கிலோமீட்டர் தொலைவிலும் நிலைநிறுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் மேலாண்மை வனப்பகுதி, கடலோரப் பகுதி, உள்நாட்டு நீர் நிலைகள், மண்வளம் மற்றும் ராணுவ உளவுப் பணிக்காக 380 கிலோ எடைகொண்ட ஹைபர் ஸ்பெக்ட்ரல் இமேஜிங் செயற்கைக்கோள் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான 28 மணிநேர கவுன்ட் டவுன் இன்று அதிகாலை 5.58 மணிக்கு தொடங்கியுள்ளது.
0 Comments