Tamil Sanjikai

பேட்டரியில் ஓடும் ஆட்டோக்களை ஆட்டோமொபைல் உற்பத்தியில் முன்னணியில் விளங்கும் மஹிந்திரா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. டிரியோ’ என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த ஆட்டோக்கள் கடந்த வாரம் பெங்களூருவில் அறிமுகம் செய்யப்பட்டன.

பேட்டரி வாகனங்களில் மிகப் பெரும் குறையாக இருப்பது, அதில் உள்ள மின்சக்தி (சார்ஜ்) வெகுவிரைவாக தீர்ந்துவிடுவதுதான். அந்த குறையை நிவர்த்தி செய்ய மஹிந்திரா நிறுவனம் தன்னுடைய புது மாடலான டிரியோவில் நீண்ட நேரம் நிலைத்திருக்கும், அதேசமயம் அதிக தூரம் ஓடக்கூடிய லித்தியம் அயன் பேட்டரிகள் பயன்படுத்தியுள்ளன.

‘டிரியோ’ மற்றும் ‘டிரியோ யாரி’ என்ற இரண்டு பெயர்களில் வந்திருக்கும் இவற்றின் விலை ரூ.1.35 லட்சத்தில் தொடங்குகிறது. மத்திய அரசு பேட்டரி வாகனங்களுக்கு ‘பேம்’ திட்டத்தின்கீழ் மானியம் வழங்குவதால், மானியத் தொகை போக மீதி தொகையை, விற்பனையக விலையாக நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த ஆட்டோவில் வழக்கமான வாகனங்களில் உள்ளதைப் போன்று கிளட்ச் கிடையாது. வாகனப் புகையும் வராது. அதனால் சுற்றுச் சூழலுக்கு கேடு ஏற்படுத்தாது. மேலும் வாகனத்தில் அதிர்வுகளும் இருக்காது. இதனால் பயண களைப்பு தோன்றாது. அதோடு லித்தியம் பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளதால் இதன் பராமரிப்பு செலவும் குறைகிறது.

முதலில் பெங்களூரு, அதையடுத்து ஐதராபாத் பின்னர் படிப்படியாக இந்த ஆட்டோக்களை பிற நகரங்களுக்கு விரிவுபடுத்த மஹிந்திரா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாக பயணிகள் ஆட்டோவை அறிமுகப்படுத்தியுள்ள இந்நிறுவனம், அடுத்த கட்டமாக சரக்குகளை ஏற்றிச் செல்லும் ‘பிக்-அப்’ ஆட்டோக்களை தயாரிக்கவும் முடிவு செய்துள்ளது.

இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 110 கி.மீ. தூரம் வரை ஓடும். இதனால் ஒரு கி.மீ. தூரத்துக்கான செலவு வெறும் 50 காசுகள் மட்டுமே. பேட்டரிக்கு 5 ஆண்டு உத்தரவாதமும் அளிக்கப்படுகிறது. இது மணிக்கு 45 கி.மீ. வேகத்தில் செல்லக் கூடியது.

0 Comments

Write A Comment