Tamil Sanjikai

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் நம்பகத்தன்மையற்ற வகையில் செயல்பட்டு ஸ்பாம் தகவல்களை பரப்பிய காங்கிரஸ் கட்சியுடன் நெருங்கிய தொடர்புடையவர்களின் 687 பக்கங்களை ஃபேஸ்புக் நிறுவனம் முடக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் பாக். ராணுவத்தின் ஆதரவுடன் இந்தியாவை குறிவைத்து செயல்பட்ட ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் கணக்குகளையும் முடக்கியுள்ளதாக அறிவித்துள்ளது ஃபேஸ்புக்.

இந்தியாவின் மிக முக்கியமான கட்சிகளுள் குறிப்பிடத்தக்கதான காங்கிரஸின் தகவல் தொழில்நுட்ப பிரிவில் அங்கம் வகிப்பவர்களுடன் தொடர்புடைய 687 கணக்குகள், பக்கங்கள், குழுக்கள் ஆகியவற்றை ஃபேஸ்புக் நிறுவனம் முடக்கியுள்ளது .

ஒருங்கிணைந்த நெட்வொர்க் அடிப்படையில் இணைந்து செயலாற்றி தேவையற்ற தகவல்களை (spam) பரப்பியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.

தங்களது அடையாளத்தை மறைத்துக்கொண்டு இது போன்ற நெட்வொர்க்காக செயல்பட்டு வந்த காரணத்தால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஃபேஸ்புக் இணைய பாதுகாப்பு கொள்கை பிரிவின் தலைவர் நதானியல் தெரிவித்தார். எங்களது சேவையை தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்கவே இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இதே காரணத்தினால் பாகிஸ்தான் ராணுவத்தில் பணிபுரிந்துவருபவர்களின் நூற்றுக்கணக்கான ஃபேஸ்புக் கணக்குகளையும் ஃபேஸ்புக் முடக்கியுள்ளது.

Inter-Service Public Relations எனப்படும் பாகிஸ்தானிய ராணுவத்துடன் தொடர்புடைய நிறுவனத்தின் ஊழியர்கள் பலர் அவர்களின் ஃபேஸ்புக் கணக்குகள் மூலம் பாகிஸ்தான் ராணுவத்தின் ரசிகர் பக்கங்களை தொடங்கி பாகிஸ்தான் அரசியல், அரசியல் தலைவர்கள், இந்திய அரசு, பாகிஸ்தான் ராணுவம் குறித்த தகவல்களை பரப்பியதால் 103 ஃபேஸ்புக் பக்கங்கள், குழுக்கள், கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

காஷ்மீரின் புல்வாமா தாக்குதல் சம்பவத்திற்கு பின்னரே இந்த செயல்பாடு அதிகரித்ததாகவும் அந்நிறுவனத்தின் நதானியல் தெரிவித்தார்.

0 Comments

Write A Comment