Tamil Sanjikai

உலகின் பல்வேறு நாடுகள் 5G சேவையை அறிமுகப்படுத்த முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. சீனாவில் 5G சேவையை அறிமுகப்படுத்தும் வகையில் அதற்கான பரிசோதனை முயற்சியை China Telecom நிறுவனம் மேற்கொண்டது. தெற்கு சீனாவின் Shenzhen நகரம் உட்பட 6 நகரங்களில் முதற்கட்டமாக 5G சேவைக்கான கட்டமைப்புகளை அமைத்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், சராசரியாக 1 நொடியில் 1 ஜிகா பைட் அளவிற்கு டேட்டாவை தரவிறக்கம் செய்துகொள்ள முடிகிறது என்றும், 3 ஜிகா பைட் வரை தரவிறக்கம் செய்துகொள்ள முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது. 2019 க்குள் மேலும் பல பகுதிகளுக்கு 5G சேவையை விரிவுபடுத்தி சோதனை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும், 2020 க்குள் வணிக நோக்கிலான பயன்பாட்டிற்கு கொண்டுவர இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் 5ஜி சேவை வசதி வருகிற 2022-ஆம் ஆண்டில் தான் கிடைக்கும் என டிராய் செயலாளர் எஸ்.கே. குப்தா தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான டிராயின் செயலாளர் குப்தா, நாட்டில் இப்போது 40 கோடி பேருக்கு இண்டெர் சேவை தரமான முறையில் வழங்கப்படுகிறது. நாளுக்கு, நாள் செல்போன் சேவை வளர்ந்து வருவதை சுட்டிக் காட்டிய அவர், இதற்கு ஈடு கொடுக்கும் வகையில் தொழில்நுட்ப வசதிகளும் மேம்படுத்தப்படுகின்றன. வருகிற 2022-ஆம் ஆண்டில் தான் நாட்டில் 5 ஜி சேவை நடைமுறைக்கு வரும் என்றும் இதன் மூலம் டேட்டா மற்றும் இணையதள வசதிகள் பெரிதும் மேம்படும் என்று தெரிவித்தார்.

இந்தியாவில் 5ஜி ஸ்மார்ட்போன்கள், அடுத்த ஆண்டு இறுதியில் வெளிவந்தாலும், 2020ஆம் ஆண்டிலேயே முழுமையாக சந்தைப்படுத்தப்படும் என தெரிகிறது. தற்போது 4ஜி செல்போன் சேவையை வழங்கி வரும் ஜியோ, ஏர்டெல், பி.எஸ்.என்.எல். ஆகிய நிறுவனங்கள், 5 ஜி சேவையை வழங்குவதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

0 Comments

Write A Comment