சென்னையில் பள்ளி மாணவன் ஒருவன் காரை தாறுமாறாக ஓட்டி விபத்து ஏற்படுத்தியதில் 4 பேர் படுகாயமடைந்தனர்.
சென்னை தாம்பரத்தை அடுத்த கேம்ப் ரோடு - மப்பேடு சாலையில் கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக வந்த கார் ஒன்று சாலையில் இருந்த தடுப்பு கம்பிகள் மீது மோதி, முன்னால் சென்று கொண்டிருந்த 2 இருசக்கர வானங்கள் மீதும் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில், கிளாட்சன் (18), விக்ரம் (18), ஆறுமுகம் (40) அவரது மனைவி சாந்தி (35) ஆகிய நான்கு பேர் பலத்த காயமடைந்தனர்.
இதில் கிளாட்சன் என்ற மாணவன் உயிருக்கு ஆபத்தான நிலையில், பள்ளிக்கரணையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஆறுமுகம் மற்றும் சாந்தி இருவரும் சேலையூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுதொடர்பாக குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் நடத்திய விசாரணையில், விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற காரின் ஓட்டுநர் 18 வயது நிறைவடையாத பள்ளி மாணவன் என்பது தெரிய வந்துள்ளது. தலைமறைவாக உள்ள அந்த மாணவனை போலீஸார் தேடி வருகின்றனர்.
0 Comments