Tamil Sanjikai

ஈரோடு பழையபாளையம் சுத்தானந்தன் நகரை சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 43). இவருடைய மனைவி நதியா. ஸ்ரீதர் ஈரோட்டில் உள்ள ஒரு ஜவுளி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர் தனது குடும்ப செலவிற்காக தனியார் நிதி நிறுவனம் நடத்தி வரும் 2 பேரிடம் ரூ.40 ஆயிரம் கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த தொகைக்கு அவர் மாதந்தோறும் பணம் செலுத்தி வந்தார். இதுவரை ரூ.30 ஆயிரம் வரை கொடுத்து உள்ளார். மீதம் ரூ.10 ஆயிரம் கொடுக்க வேண்டி இருந்தது.

இந்த நிலையில் கடன் கொடுத்த தனியார் நிதி நிறுவனத்தை சேர்ந்தவர்கள் ஸ்ரீதரிடம் கந்து வட்டியாக ரூ.30 ஆயிரம் கட்ட வேண்டும் என்று கூறி உள்ளனர். அதற்கு அவர் ‘இன்னும் ரூ.10 ஆயிரம் தான் நான் தரவேண்டும், அதையும் தவணை முறையில் விரைவில் செலுத்தி விடுகிறேன்’ என்று கூறி உள்ளார். ஆனால் அவர்கள் அதை ஏற்க மறுத்து தொடர்ந்து ஸ்ரீதருக்கு தொல்லை கொடுத்து வந்தனர்.

இதனால் அவர் மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளார். சம்பவத்தன்று ஸ்ரீதர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து விஷம் குடித்துவிட்டார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் ஸ்ரீதர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மனைவி நதியா, ஈரோடு சூரம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில், ‘தனது கணவர் தற்கொலைக்கு காரணமான தனியார் நிதி நிறுவனங்களை சேர்ந்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி இருந்தார்.

அதன் பேரில் போலீசார், தனியார் நிதி நிறுவனங்களை சேர்ந்த 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே தற்கொலை செய்து கொண்ட ஸ்ரீதரின் உடல் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்து வைக்கப்பட்டு இருந்தது. அப்போது அவருடைய உறவினர்கள் 50-க்கும் மேற்பட்டோர் அங்கு ஒன்று திரண்டு ஸ்ரீதரின் சாவுக்கு காரணமான தனியார் நிதி நிறுவனங்களை சேர்ந்தவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்று கூறி அவரது உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது அவர்கள், ‘ஸ்ரீதரின் சாவுக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் அதுவரை நாங்கள் அவரது உடலை வாங்க மாட்டோம்’ என்றனர். அதற்கு போலீசார், இதுகுறித்து விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களை விரைவில் கைது செய்வோம். எனவே நீங்கள் போராட்டத்தை கைவிட்டு உடலை வாங்கி செல்லுங்கள்’ என்றனர். அதை ஏற்றுக்கொண்ட அவர்கள் ஸ்ரீதரின் உடலை வாங்கி சென்றனர். இந்த சம்பவத்தால் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

0 Comments

Write A Comment