Tamil Sanjikai

தமிழகத்தில் கஜா புயல் தாக்கி 5 நாட்கள்முடிந்த நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக மின்கம்பங்களை சீரமைத்து மின்விநியோகம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. ஆங்காங்கே சாய்ந்து கிடக்கும் மின்கம்பங்களை சரிசெய்ய வெளியூர்களில் இருந்து மின்வாரிய பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு பணிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் பெய்து வரும் மழை, மீட்புப்பணிகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. எனினும் மழையில் நனைந்து கொண்டே கூட பலர் மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். நாகை மாவட்டத்தில் மின் பணியாளர்கள் மழையில் நனைந்தபடி சாலை ஓரங்களில் அமர்ந்து தான் சாப்பிட வேண்டிய நிலை உள்ளது. எனினும் அவர்கள் அர்ப்பணிப்போடு பணியை தொடர்கின்றனர். தண்ணீர் தேங்கி நிற்கும் வயல்வெளிகளின் வழியே மின்கம்பங்களை தோளில் சுமந்து சென்று நட்டு, மின் இணைப்பை சரிசெய்து வருகின்றனர்.

இதனிடையே புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில், புயலால் சேதமடைந்த ட்ரான்ஸ்ஃபார்மரை பழுதுபார்த்துக் கொண்டிருந்த இரண்டு தொழிலாளர்கள், மின்சாரம் தாக்கி படுகாயமடைந்தனர். புதுக்கோட்டை களமாவூர் பகுதியில் மூகாம்பிகை பொறியியல் கல்லூரி அருகேயுள்ள பழுதான ட்ரான்ஸ்பார்மரை, நாமக்கல்லைச் சேர்ந்த முருகேசன் மற்றும் தேவனாங்குறிச்சியை சேர்ந்த மோகன் ஆகிய இரண்டு தொழிலாளர்கள் மேலே ஏறி சீரமைத்துக் கொண்டிருந்தனர்.

அப்போது கல்லூரியில் ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டதை அடுத்து, ட்ரான்ஸ்பார்மரில் பணியாற்றிக் கொண்டிருந்த இருவரும் தூக்கி வீசப்பட்டு அந்தரத்தில் தொங்கினர். அப்போது அவ்வழியாக வந்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அவரது காரிலேயே இருவரையும் திருச்சி மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தார்.படுகாயமடைந்த தொழிலாளர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மின்கம்பங்களை சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும், விரைவில் மின்விநியோகம் சீராகும் என்றும் தெரிவித்துள்ளார்.

0 Comments

Write A Comment