Tamil Sanjikai

திருநெல்வேலி அருகே முகமூடி கொள்ளையர்களை விரட்டி அடித்த வயதான தம்பதியரை, அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் சக்தி குமார் நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தார்.

திருநெல்வேலி மாவட்டம் கடையம் கல்யாணிபுரம் பகுதியைச் சேர்ந்த சண்முகவேல், தனது பண்ணை வீட்டின் வெளியேஅமர்ந்திருந்தார். அப்போது, அங்கு வந்த இரண்டு முகமூடி கொள்ளையர்களில் ஒருவர், சண்முகவேலின் கழுத்தை துணியால் இறுக்கி கொல்ல முயன்றார். அவர் கூச்சலிட்டதை அடுத்து, வெளியே வந்த அவரது மனைவி செந்தாமரை, பிளாஸ்டிக் நாற்காலிகள் மற்றும் செருப்புகளைக் கொண்டு கொள்ளையர்கள் மீது தாக்குதல் நடத்தினார். சுதாரித்து எழுந்த முதியவர், தனது மனைவியுடன் சேர்ந்து அரிவாளை காட்டி மிரட்டிய கொள்ளையர்களை தாக்கத் தொடங்கினார். அச்சம் இன்றி கணவன் - மனைவி இருவரும் கையில் கிடைத்த பொருட்களை எல்லாம், தூக்கி கொள்ளையர்கள் மீது வீசி, அவர்களை அங்கிருந்து ஓட வைத்தனர்.

இந்த பரபரப்பான காட்சிகள், வீட்டிலிருந்த சிசிடிவியில் பதிவாகியதை அடுத்து, அந்த காட்சிகளையும், அது தொடர்பான செய்திகளையும் தொலைக்காட்சிகள் வெளியிட்டன. மேலும், சமூக வலைதளங்களிலும் அந்த காட்சிகள் வைரலாகின. ஆயுதங்களுடன் வந்த கொள்ளையர்களுக்கு எதிராக துணிச்சலுடன் சண்டையிட்டு அவர்களை விரட்டி அடித்த சண்முகவேல் - செந்தாமரை தம்பதியரை திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருண் சக்தி குமார் நேரில் சந்தித்து தனது பாராட்டினை தெரிவித்தார். மேலும், சம்பவம் குறித்தும் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டார்.

மேலும்,வயதான நிலையிலும் துணிச்சலுடன் கொள்ளையர்களை விரட்டியடித்த அந்தத் தம்பதியினருக்கு தமிழகம் முழுவதும் உள்ள மக்கள் பலர் சமூக வலைத்தளங்களின் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், தமிழில் தனது ட்விட்டர் பக்கத்தில் நெல்லை தம்பதியினருக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார், இதேபோன்று பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனும் தனது ட்விட்டர் பக்கத்தில் நெல்லை தம்பதியினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

0 Comments

Write A Comment