Tamil Sanjikai

காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கை தயாரிக்க மத்திய அரசு அளித்த அனுமதியை ரத்து செய்யக்கோரி திமுக சார்பில் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சி தென்னூர் உழவர் சந்தை திடலில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி, உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்துக் கொண்டனர்.

மேடையில் ஸ்டாலின் கோஷங்களை எழுப்ப மற்ற தலைவர்களும், தொண்டர்களும் அந்த முழக்கங்களை பின்தொடர்ந்து கூறினர். காவிரியை காப்போம். அணையை தடுப்போம் என்றும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுக கூட்டணி வலுவாக உள்ளதாகவும், அந்த கூட்டணியில் யாரும் குழப்பத்தை ஏற்படுத்த முடியாது என்று கூறிய . அவர் கருணாநிதியின் இறுதிகாலத்தில் அவரை சந்தித்த நிகழ்வை பகிர்ந்து கொண்டார். இனி தன் வாழ்நாளில் ஸ்டாலினுக்கு கவசமாக இருப்பேன் என்று அவருக்கு வாக்குறுதி அளித்ததாகவும் குறிப்பிட்டார்.

ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், திமுக அணியை பலவீனப்படுத்த முயற்சி நடப்பதாகவும், அப்படி செய்தால்தான் ஓரிரு இடங்களையாவது பாஜக வெற்றி பெற முடியும் என திட்டமிடுவதாகவும் குற்றம்சாட்டினார். காவிரி விவகாரத்தில் இதற்கு முன் இருந்த மத்திய அரசுகள் நடுநிலை வகித்ததாக குறிப்பிட்ட திருமாவளவன், தற்போதைய பாஜக அரசு அரசியல் ஆதாயத்திற்காக தமிழகத்திற்கு துரோகமிழைப்பதாகவும், குற்றம்சாட்டினார்.

அதனை தொடர்ந்து பேசிய ஸ்டாலின், சட்டமன்றத்தில் தனது கன்னிப்பேச்சிலேயே உழவர் பிரச்சனை பற்றி குறிப்பிட்டவர் கலைஞர் என குறிப்பிட்ட அவர் , திருச்சியில் நடைபெற்று வரும் தற்போதைய போராட்டம் அரசியலுக்காக அல்ல, ஊழவர் கண்ணீரை துடைக்கவே என கூறினார். மேலும், கஜா புயல் தாக்குதலால் ஏற்கனவே காவிரி டெல்டா மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.தமிழகத்திற்கு தேவையான பேரிடர் நிவாரணம் அளிக்காத மத்திய அரசுக்கு தமிழக மக்கள் ஏன் வரி செலுத்த வேண்டும் என கேள்வி எழுப்பினார்.

0 Comments

Write A Comment