Tamil Sanjikai

மணப்பாறை பகுதிகளில் வீட்டு குடிநீர் இணைப்புகளை துண்டிப்பு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகேயுள்ள வையம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவி வருவதால் மக்கள் கடும் இன்னல்களுக்குளாகி வருகின்றனர். இந்நிலையில் வையம்பட்டி அருகேயுள்ள நடுப்பட்டி பகுதியில் முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில்லை எனவும், தண்ணீர் வரும்போது சிலர் மின்மோட்டார் வைத்து தண்ணீரை உறிஞ்சுவதால் அனைத்து பகுதிக்கும் சீரான குடிநீர் விநியோகம் கிடைப்பது இல்லை என்றும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இது குறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் தெரியப்படுத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், பொதுமக்கள் கடந்த 22 ஆம்தேதி நடுப்பட்டியில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தை காலிகுடங்களுடன் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது வையம்பட்டி ஒன்றிய அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையின்போது, வீட்டு குடிநீர் இணைப்புகளை துண்டித்து விட்டு ஊருக்கு மையமாக உள்ள நான்கு இடங்களில் ஒவ்வொரு இடத்திலும் 10க்கும் மேற்பட்ட பொது குடிநீர் குழாய்கள் அமைத்து தருவதாகவும், அதில் பொதுமக்கள் தண்ணீர் பிடித்துக்கொள்ளுமாறும் தெரிவித்தனர். இதற்கு பொதுமக்கள் சம்மதம் தெரிவித்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்நிலையில் வீட்டு குடிநீர் இணைப்புகளை துண்டிப்பது என்ற அதிகாரிகளின் முடிவுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதைவிடுத்து அனைத்து வீட்டு இணைப்புகளையும் துண்டிப்பது தீர்வாகாது என தெரிவித்து நடுப்பட்டி பொதுமக்கள் சிலர் இன்று ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அனைவரும் ஒரே இடத்திற்குச் சென்று தண்ணீர் பிடிப்பதால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும், தண்ணீர் பிடிக்கும் போட்டியில் ஒருவருக்கொருவர் தள்ளுமுள்ளு ஏற்படும் என்பதால் அதிகாரிகள் ஒரே இடத்தில் தண்ணீர் குழாய் அமைக்கும் முடிவை கைவிட்டு ஏற்கனவே உள்ளது போல் தண்ணீர் விநியோகம் செய்யவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

0 Comments

Write A Comment