கஜா புயல் இன்று இரவு கரையை கடக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், ராமேஸ்வரம் கடல் பகுதி சீற்றமின்றி இயல்பாகவே காணப்படுகிறது. பாம்பன், தங்கச்சிமடம், தேவிபட்டினம், திருப்பாலைகுடி ஆகிய இடங்களில் கடலில் எந்த மாற்றமுமின்றி வழக்கம் போலவே காட்சியளிக்கிறது. இருந்த போதிலும் புயல் எச்சரிக்கையை தொடர்ந்து மீனவர்கள் 4வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. அரசின் அறிவுறுத்தலின் படி குறிப்பிட்ட இடைவெளிவிட்டு பாதுகாப்பாக படகை நிறுத்திவைத்துள்ளனர். இந்நிலையில் இராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராட அதிகாலை முதலே அதிக அளவிலான பக்தர்கள் வரத்துவங்கியுள்ளனர்.
புதுச்சேரியில் உள்ள மீனவர்கள் 3வது நாளாகக் கடலுக்குள் செல்லவில்லை. 500க்கும் மேற்பட்ட படகுகள் துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளன. கஜா புயலால் கனமழை இருக்கும் என்ற காரணத்தில் அனைத்து கல்லூரி, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் துறைமுகத்தில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. காலை முதலே புதுச்சேரி கடல் சீற்றமாக காணப்படுகிறது.
தற்போது சென்னையில் பரவலாக மழை பெய்யத் தொடங்கியுள்ளது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்று நள்ளிரவு லேசான மழை பெய்தது. இதனை தொடர்ந்து சென்னையின் கோயம்பேடு, அரும்பாக்கம், நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை போன்ற பகுதிகளில் காலை நேரத்தில் காற்று சிறிது வேகமாக வீசியது. பின்னர் வானம் கருத்து மழை பெய்ய ஆரம்பித்தது.
இதே போன்று வில்லிவாக்கம், பெரம்பூர் ஆகிய இடங்களிலும் காலையில் மழை பெய்தது. தொடர்ந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது- இதனிடையே காலை பதினொன்றரை மணி முதல் சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளைப் பொறுத்த வரை ஓரிரு இடங்களில் அதிக காற்றுடன் கனமழை பெய்யத் தொடங்கலாம் எனவும் அந்த மையம் குறிப்பிட்டுள்ளது.
0 Comments