Tamil Sanjikai

சென்னையை சேர்ந்த மாணவர் உதித்சூர்யா, நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி அரசு மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்ததாக எழுந்த விவகாரம் கடந்த ஒரு வாரமாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், இது தொடர்பான புகாரின் அடிப்படையில் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டு உள்ளது.

இந்தநிலையில் மாணவர் உதித்சூர்யா, தனக்கு முன் ஜாமீன் வழங்கும்படி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு நேற்று பகல் 12 மணி அளவில் விசாரணைக்கு வந்தது. முடிவில் இந்த விவகாரத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. எனவே மனுதாரர் இந்த வார கடைசியில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் முன்பு சரண் அடையலாம். அவ்வாறு சரண் அடைந்தால், இந்த முன்ஜாமீன் மனுவை, ஜாமீன் மனுவாக மாற்றி அடுத்த வாரம் விசாரிக்கப்பட்டு உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றார். பின்னர் நீதிபதி, இந்த வழக்கை வருகிற 1-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இந்நிலையில், நீட் ஆள்மாறாட்டம் செய்த புகாருக்கு ஆளான மாணவர் உதித் சூர்யா குடும்பத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார். ஆந்திர மாநிலம் திருப்பதி மலையடிவாரத்தில் உதித் சூர்யாவை கைது செய்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் தேனி அழைத்துச் செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் தேனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று தெரிகிறது.

0 Comments

Write A Comment