தமிழக மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக 350 எம்.பி.பி.எஸ். இடங்களை சேர்க்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் உள்ள 22 மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 2,900 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன. இதில் கூடுதலாக மேலும் 350 கூடுதல் எம்.பி.பி.எஸ் இடங்களை தமிழக அரசு சேர்க்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருக்கும் எம்.பி.பி.எஸ் இடங்கள் 3,250ஆக அதிகரிக்கும். நடப்பு கல்வி ஆண்டில் மதுரை மற்றும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரிகளில் தலா 100 இடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. அதேபோல மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையும் 22-லிருந்து 24 ஆக உயரும் என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் எம்.பி.பி.எஸ் இடங்களின் எண்ணிக்கையை 250ஆக உயரத்துவதற்கான பணிகளையும் அரசு முன்னெடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே தமிழகத்தில் இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களின் எண்ணிக்கை 17 சதவிகிதம் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 2017-2018-ஆம் ஆண்டில் நீட் நுழைவுத்தேர்வுக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் விண்ணப்பிருந்த நிலையில் 2018-19-ஆம் ஆண்டுக்கான நுழைவுத்தேர்வுக்கு 1,40,385 பேர் விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டு தமிழகத்தில் போதுமான தேர்வு மையங்கள் அமைக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்த ஆண்டு தேர்வு மையங்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி தஞ்சை, கடலூர், நாகை, கரூர் ஆகிய இடங்களிலும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட வாய்ப்பு உள்ளது.
0 Comments