Tamil Sanjikai

பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்காக, ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதியளித்து உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்ற தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு தடைவிதித்த உச்சநீதிமன்றம், தேவைப்பட்டால் வேதாந்தா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெறலாம் என ஆணையிட்டது.

இதையடுத்து, ஸ்டெர்லைட் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாரயணன், நிர்மல்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஸ்டெர்லைட் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம், பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக ஆலையை திறக்க அனுமதிக்க வேண்டும் என்றார். அப்போது தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், மொத்த முதலீடான, 3 ஆயிரம் கோடி ரூபாயை விட அதிகமாகவே, ஸ்டெர்லைட் நிர்வாகம், வருவாய் ஈட்டிவிட்டதாக வாதிட்டார்.

ஸ்டெர்லைட் ஆலையால் 28 ஆயிரம் அடி ஆழத்துக்கு நிலத்தடி நீர் மாசடைந்ததாலேயே, அந்த ஆலை மூடப்பட்டதாகத் அவர் வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், தற்போது ஸ்டெர்லைட் ஆலை யார் கட்டுப்பாட்டில் உள்ளது? என கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், அந்த ஆலை தூத்துக்குடி ஆட்சியரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக தெரிவித்தார். ஆலையில், அபாயகரமான பொருட்கள் இருப்பதால் ஏதேனும் அசம்பாவித சம்பவம் ஏற்பட்டால் யார் பொறுப்பேற்பது என்பது தான் மனுதாரரின் கோரிக்கை என நீதிபதிகள் கூறினர். இதற்கு பதிலளித்த தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர், அப்படி எதுவும் நடக்காது என்றும், ஒருவேளை ஏதாவது நிகழ்ந்தால் மாநில அரசு பொறுப்பேற்கும் என்றார்.

இதையடுத்து, வழக்கில் ஆலை பராமரிப்பு தொடர்பாக எவ்வித இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்த நீதிபதிகள், மனு தொடர்பாக தமிழ்நாடு அரசு, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வருகிற 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

0 Comments

Write A Comment