Tamil Sanjikai

தமிழகத்தை தாக்கிய கஜா புயல் சேத விவரங்கள் குறித்து மத்திய குழு அறிக்கை தாக்கல் செய்ய தாமதமாவதற்கு தமிழக அரசே காரணம் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மத்திய அரசு கூறியுள்ளது. கஜா புயல் பாதிப்புகள் குறித்து இறுதி அறிக்கை தயாரிப்பதற்கு முன்னதாக கேட்ட சில சந்தேகங்களுக்கு தமிழக அரசு இன்னும் விளக்கம் அளிக்கவில்லை என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கஜா புயல் பாதிப்புகளுக்கான நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும், தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சசிதரண், ஆதிகேசவலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர்கள் தரப்பில் நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் வீடுகள் சேதம், இழப்பு குறித்து சரியான ஆவணங்களை தாக்கல் செய்யாதவர்களுக்கு நிவாரணம் வழங்கவில்லை என்று அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இதை பார்த்த நீதிபதிகள், ஏதேனும் ஒரு ஆவணம் வழங்கினால் கூட நிவாரணம் கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும் மத்தியக் குழு, தனது இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய எவ்வளவு நாட்கள் ஆகும் என மத்திய அரசு வழக்கறிஞர்களிடம் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த அவர்கள், இறுதி அறிக்கை தயாரிப்பதற்கு முன்னர், சில சந்தேகங்களை தமிழக அரசிடம் கேட்டுள்ளதாகவும், அதற்கு இன்னும் பதில் வரவில்லை என்றும் கூறினர். இதற்கு விளக்கம் அளித்த தமிழக அரசு வழக்கறிஞர், மத்திய குழுவின் சந்தேகங்கள் தொடர்பாக இன்றே விளக்கங்கள் அனுப்பப்படும் என்று தெரிவித்தார். இதைத் தொடர்ந்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய எவ்வளவு நாட்கள் ஆகும் என்பதைக் கேட்டு நீதிமன்றத்தில் தெரிவிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், 17-ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

1 Comments

  1. # கன்னியாகுமரி மாவட்டத்துக்கு இதுவரை 6 சாகித்ய அகாடமி விருதுகளும், 1 மொழிபெயர்ப்பு விருதும், 2 யுவ புரஷ்கார் விருதுகளும் கிடைத்துள்ளது. # அந்த தகவல்களையும் இந்த கட்டுரையில் சேர்த்திருக்கலாம்

Write A Comment