Tamil Sanjikai

பவானி ஆற்றிலிருந்து வெளியேறும் உபரி நீரை கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள வறட்சி மிகுந்த காரமடை, மேட்டுப்பாளையம், அன்னூர், அவிநாசி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நீர் நிலைகளில் நிரப்பி குடிநீர் மற்றும் நீர்ப்பாசன தேவைகளுக்கு பயன்படுத்துவதுதான் அத்திக்கடவு - அவிநாசி திட்டம்.

இந்த திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் கிடந்தது வந்தது.தற்போது, கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையான அத்திக்கடவு - அவிநாசி திட்டத்திற்கான டெண்டர் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

1957-ம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராக இருந்த மாரப்பக்கவுண்டர், இந்த திட்டம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் முதன்முதலாக கோரிக்கை வைத்தார். அப்போதிலிருந்து 60 ஆண்டுகளுக்கும் மேலாக வெறும் கோரிக்கையாகவே இருந்து வந்தது அத்திக்கடவு - அவிநாசி திட்டம். இந்த திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி, 3 மாவட்ட மக்களும் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.

நடப்பு நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட்டில் இந்த திட்டத்திற்காக ரூபாய் . 250 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அத்திக்கடவு - அவிநாசி திட்டத்திற்காக 1,532 கோடி ரூபாய் மதிப்பிலான பணிக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இன்று முதல் வரும் ஜனவரி 23-ஆம் தேதி மாலை 3 மணி வரை டெண்டர் பெறப்படும். அன்றைய தினமே டெண்டர் இறுதி செய்யப்படும்” என்று கூறப்பட்டுள்ளது. திட்டப்பணிகளை 34 மாதங்களில் முடிக்க வேண்டும். அதன்பின் 60 மாதங்களுக்கு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட விதிமுறைகளும் டெண்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 25 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பயன்பெற இருக்கிறது.

0 Comments

Write A Comment