அடையாறு, கூவம் மற்றும் பக்கிங்காம் கால்வாயை சீரமைக்காமல், சுற்றுச்சூழல் மற்றும் பொது சுகாதாரத்திற்கும் கேடு ஏற்படுத்தியதாக தமிழக அரசுக்கு, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் 100 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
இதுதொடர்பான வழக்கில், அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய் ஆகியவற்றை அகலப்படுத்துதல், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், நீர்வெளியேற்று நிலையங்கள் அமைத்தல் போன்றவை குறித்து தமிழக அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையை படித்த நீதிபதிகள், அரசு அதிகாரிகளின் நடவடிக்கை மந்தமாக உள்ளதாக அதிருப்தி தெரிவித்தனர்.
தனது குடிமக்களுக்கு நல்ல சுற்றுச்சூழலை ,அளிக்கும் கடமை அரசுக்கு இருப்பதாக கூறிய நீதிபதி, சுற்றுச்சூழலை பாதுகாக்க தமிழக அரசு தவறி விட்டது என்பதை அடையாறு, கூவம், பங்கிங்ஹாம் கால்வாய் விவகாரங்கள் மூலமாக தெளிவாக காட்டுவதாகவும் குறிப்பிட்டனர்.
இதுதொடர்பாக கால வரையறைக்குட்பட்ட செயல் திட்டத்தை பொதுப்பணித்துறை வகுக்க வேண்டும் என்றும், நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் தமிழக அரசுக்கு 100 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதாக தெரிவித்த நீதிபதிகள், அபராத தொகையை மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் செலுத்த வேண்டும் எனவும,
ஏப்ரல் 23ஆம் தேதி தமிழ்நாடு தலைமைச் செயலாளர் தீர்ப்பாயத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஆராயவும், மறுசீரமைப்பு நடவடிக்கைகளை கண்காணிக்கவும் சிறப்பு குழுவை நியமித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம், ஆய்வறிக்கையை 3 மாதத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
0 Comments