கஜா புயல் குறித்து பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கஜா புயல் நிவாரண நிதியாக தமிழகத்திற்கு 15 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
நேற்று மாலை டெல்லி சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு இல்லத்தில் அ.தி.மு.க. எம்.பி.க்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். தொடர்ந்து இன்று காலை டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் இருந்து புறப்பட்ட அவருக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
பின்னர் பிரதமர் இல்லத்திற்கு சென்ற முதல்வர், காலை 9.45 மணியளவில் மோடியை சந்தித்துப் பேசினார். அப்போது கஜா புயலால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள சேதங்களைப் பற்றி அவர் விரிவாக பேசியுள்ளார். மக்களின் உடமைகளுக்கும், வேளாண்மைக்கும், மின்சாரம், சாலை உள்ளிட்ட உள்கட்டமைப்புகளும் ஏற்பட்டுள்ள சேதங்களையும், தமிழக அரசு மேற்கொண்டு வரும் மீட்பு, சீரமைப்பு, நிவாரணப் பணிகள் குறித்தும் முதல்வர், பிரதமரிடம் எடுத்துரைத்துள்ளார்.
அப்போது, நிவாரண நிதியாக 15 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்றும், அதில் 1500 கோடி ரூபாயை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் பிரதமரிடம் முதல்வர் வலியுறுத்தியுள்ளார். மேலும் புயல் சேதங்களை மதிப்பிட்டு ஆய்வு செய்வதற்காக மத்திய குழுவை விரைந்து தமிழகம் அனுப்ப வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
0 Comments