அக்னிஸ்தலமான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா உலகப் பிரசித்தி பெற்றது. இந்த திருவிழாவை காண உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து பல லட்சம் பக்தர்கள் வந்து கிரிவலம் சென்று அருணாசலேஸ்வரரை தரிசனம் செய்கிறார்கள்.
இந்த ஆண்டு 10 நாள் நடைபெறும் தீபத்திருவிழா இன்று காலை 5.31 மணிக்கு கோவிலில் உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத , மகா தீப விழா கொடியேற்றப்பட்டது. அதிகாலையில் கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கொடியேற்று விழாவில் கலந்துக் கொண்டு ‘‘அண்ணாமலையாருக்கு அரோகரா, அண்ணாமலை யாருக்கு அரோகரா’’ என்று பக்தி கோஷமிட்டனர். மேலும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோரும் மாலை அணிந்து 10 நாள் விரதம் தொடங்கினர்.
அதைத்தொடர்ந்து, காலை 9 மணிக்கு அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மன், பராசக்தி, சண்டிகேஸ்வரர், விநாயகர் ஆகிய உற்சவ மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் வெள்ளி விமானங்களில் மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இரவு 8 மணிக்கு மூஷிக வாகனத்தில் ஸ்ரீவிநாயகர், மயில் வாகனத்தில் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான், வெள்ளி அதிகார நந்தி வாகனத்தில் அருணாசலேஸ்வரர், ஹம்ச வாகனத்தில் பராசக்தியம்மன், சிம்ம வாகனத்தில் சண்டிகேஸ் வரர் ஆகிய சாமிகளின் வீதியுலா நடைபெறுகிறது.
தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேரோட்டம் 20-ந் தேதி காலை 6 மணி முதல் இரவு வரை நடைபெறும். 23-ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு கோவில் மூலவர் சன்னதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை உச்சியின் மீது மகா தீபமும் ஏற்றப் படுகிறது. இதையொட்டி, கோவிலின் 9 கோபுரங்களும் மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கின்றன. தீப விழா தடையின்றி சிறப்பாக நடை பெறவும், தீபத்தை தரிசிக்க வரும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு பாதுகாப்பு அருளவும் வேண்டியும் துர்க்கையம்மன், பிடாரியம்மன், விநாயகர் உற்சவ வழிபாடும் நடத்தப்பட்டது.
தீபத்திருவிழா பாதுகாப்பு பணியில் பல்லாயிரக்கணக்கான போலீசார் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். மேலும், சிறப்பு பஸ்கள், ரெயில்களும் பக்தர்களின் வசதிக்காக இயக்கப்படுகிறது. இதனால் தற்போது திருவண்ணாமலை நகரம் ,பரபரப்பாக விழாக்கோலமாக காட்சி அளிக்கிறது.
0 Comments