Tamil Sanjikai

ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாகவே போலீசார் செயல்பட்டு வருகின்றனர் என மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி குற்றச்சாட்டு வைத்துள்ளார். இது தொடர்பாக நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராஜீவ்காந்தி கொலையில் கைதாகி 27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் 7 தமிழர்களை விடுதலை செய்ய தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அதை கவர்னருக்கு அனுப்பியுள்ளது. ஆனால் கவர்னர் அதில் முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவது கண்டிக்கத்தக்கது.

மாநிலங்களுக்கு கவர்னர் பதவி தேவையில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசே முடிவு செய்து கொள்ளலாம் என்ற நிலைப்பாட்டை கொண்டு வரவேண்டும். கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு முறையான உதவி செய்யவில்லை. மத்திய அரசிடம் இழப்பீட்டு தொகையை குறைவாக கேட்டுள்ளது.

மேலும் 8 வழிச்சாலைக்காக கையகப்படுத்தப்படும் ஒரு தென்னைக்கு 50 ஆயிரம் நிதி கணக்கிட்டு கொடுக்கப்போவதாக முதல்வர் அறிவித்திருந்தார். அதன்படி கணக்கிட்டால் கஜா புயலில் முறிந்து விழுந்த தென்னை மரங்களுக்கு மட்டும் 20 ஆயிரம் கோடி வழங்க வேண்டும். தோராயமாக டெல்டா மாவட்டங்கள் 80 ஆயிரம் கோடிக்கு சேதமடைந்துள்ளது. எனவே மாநில அரசு மத்திய அரசிடம் கூடுதலாக நிதி கேட்கவேண்டும்.

தமிழ்நாட்டில் ஜாதிய ஆணவப்படுகொலைகள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க தனிச்சட்டம் கொண்டுவரவேண்டும். ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாகவே போலீசார் செயல்பட்டு வருகின்றனர். அங்கு ஆலைக்கு எதிராக போராடுபவர்களுக்கு தங்கும் விடுதி அறைகள் கொடுக்கக்கூடாது என போலீசார் கட்டுப்பாடு விதித்துள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. எங்கள் அமைப்பு சார்பாக எந்த போராட்டம் நடைபெற்றாலும் அதற்கு போலீசார் அனுமதி கொடுப்பதில்லை. நீதிமன்ற அனுமதி பெற்றே பொதுகூட்டம் உள்ளிட்ட அனைத்தும் நடக்கிறது. தமிழகத்தில் அ.தி.மு.க. அரசு பா.ஜ.க. சொல்படியே செயல்பட்டு வருகிறது. வடமாநிலங்களில் பா.ஜ.க. தோல்விகளுக்கு பின்னாவது தன் நிலைப்பாட்டை மாற்றி கொள்ள வேண்டும். இல்லை என்றால் தேர்தலில் மிக மோசமான நிலையை அடையும்.

மேகதாது அணை பிரச்சனையில் மத்திய பா.ஜ.க. அரசும், கர்நாடக காங்கிரஸ் அரசும் தமிழகத்திற்கு எதிரான நிலையை எடுத்து வருகிறார்கள். காவிரி படுகையில் மீத்தேன் எரிவாயு மற்றும் எண்ணெய் எடுப்பதற்காக காவிரி பாசன பகுதியை மத்திய அரசு வேண்டும் என்றே வறண்ட பூமியாக்க முயற்சிக்கிறது. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 23-ஆம் தேதி திருச்சியில் பெரியார் நினைவு தின கருப்பு சட்டை பேரணி நடத்த இருக்கிறோம் என்று அவர் தெரிவித்தார்.

0 Comments

Write A Comment