காவல் துறைக்கு பயந்து கிணற்றில் பதுங்கிய திருடனை கடும் போராட்டத்திற்குப் பிறகு தீயணைப்புத் துறையினருடன் போலீசார் மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அம்பத்தூர் சந்திரசேகரபுரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் சந்தேகம்படும்படி சுற்றி திரிந்த நபரை அழைத்து விசாரிக்க முயன்ற பொழுது அவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
போலீசாருக்கு பயந்து அவர்களிடமிருந்து தப்பிக்க அங்கிருந்த கிணற்றில் குதித்துள்ளார். இதனை அறியாத போலீசார் அங்கிருந்து சென்றுவிட்டனர். இதையடுத்து சில மணி நேரம் கழித்து கிணற்றுக்குள் இருந்த நபர் தன்னை காப்பாற்றும்படி சத்தம் போட்டுள்ளார். அந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சென்ற பொழுது தான் கிணற்றினை தூர் வாருபவன் என்றும் தன்னை காப்பாற்றும்படி கேட்டிருக்கிறார் . ஆனாலும் சந்தேகமடைந்த பொதுமக்கள் இதுகுறித்து காவல் துறைக்கும் தீயணைப்புத் துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.
உடனே அங்கு விரைந்து வந்த அவர்கள் கடும் போராட்டத்திற்குப் பிறகு அந்த நபரை மீட்டுள்ளனர். போலீசார் விசாரித்தில் அந்த நபர் வண்ணாரபேட்டையை சேர்ந்த ஜெயசிங் என்பதும் அவர் மீது பல்வேறு கொள்ளை மற்றும் வழிபறி வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.
மேலும் அவர் தங்களிடம் இருந்து தப்பியதும் போலீசுக்கு தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 Comments