Tamil Sanjikai

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள பனகமுட்லுவைச் சேர்ந்தவர் ஆசிரியர் செல்வம். இவர் 12 ஆண்டுகளாக காவேரிப்பட்டணம் அருகில் உள்ள சந்தாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வந்தார். ஆசிரியர் செல்வம் ஒரு மது பிரியர். இதனால், மாதத்தில் பாதி நாட்கள் பள்ளிக்குச் சரியாக வருவதில்லை என்ற குற்றச்சாட்டுகளுக்கு ஆளானார். ஆசிரியர் செல்வம் அப்படியே பள்ளிக்கு வந்தாலும் மது அருந்திவிட்டுதான் வருவாராம். இதற்காகவே ஆசிரியர் செல்வத்துக்கு 6 மாத ஊதிய உயர்வு குறைத்து வட்டார கல்வி அலுவலர் எச்சரிக்கை கடிதம் கொடுத்துள்ளார். ஆனாலும் தன் தவறை உணராத ஆசிரியர் செல்வம் தொடர்ந்து மது குடித்துவிட்டு தான் பள்ளிக்கு வந்துள்ளார்.

நேற்று காலை வழக்கம்போல, ஆசிரியர் செல்வம் பள்ளிக்கு மது அருந்திவிட்டு வந்துள்ளார். போதை அதிகமாகி வகுப்பறையிலேயே மயங்கி விழுந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவர்கள், ஆசிரியர்கள், கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரிக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். ஆசிரியர் செல்வம் குறித்து விசாரணை மேற்கொண்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி, ஆசிரியர் செல்வம் மது குடித்துவிட்டு வகுப்பறையில் விழுந்து கிடந்த புகைப்படங்கள் மற்றும் கடந்த கால ஒழுங்கீன செயல்பாடுகளை ஆய்வுசெய்து செல்வத்தை தற்காலிக பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இந்தச் சம்பவம் கிருஷ்ணகிரி ஆசிரியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 Comments

Write A Comment