Tamil Sanjikai

தற்போது தமிழகம் முழுவதும் காய்ச்சல் பாதிப்பு காரணமாக அதிகம் பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து காய்ச்சலை கட்டுப்படுத்த முடியாத சூழல் உருவாகி உள்ளது. குமரி மாவட்டத்தில் பன்றி காய்ச்சலுக்கு இதுவரை 6 பேர் பலியாகியிருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பன்றிக் காய்ச்சலுக்கு இதுவரை ஆசாரிப் பள்ளம் அரசு மருத்துவமனையில் சுமார் 100 பேரும் தனியார் மருத்துவமனைகளில் சுமார் 100 பேரும் சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருப்பதாகவும் தற்போது அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 24 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களில் பன்றிக்காய்ச்சல் மற்றும் மர்ம காய்ச்சலுக்கு 30க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சலுக்கு 100 க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும், 9 பேருக்கு பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

தூத்துக்குடி குறிஞ்சி நகரைச் சேர்ந்த 6-ஆம் வகுப்பு மாணவன் கபிலன் கடந்த 6-ஆம் தேதி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் முதலில் தனியார் மருத்துவமனையிலும் பின்னர் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. கபிலனுக்கு மருத்துவர்கள் பன்றிக்காய்ச்சலை உறுதிப்படுத்திய நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திருச்சி அரசு மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 125 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், இவர்களில் 2 பேருக்கு டெங்குவும், 14 பேருக்கு பன்றிக் காய்ச்சலும் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் வைரஸ் காய்ச்சலுக்காக 170க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுவதாகவும், திண்டுக்கல் மாவட்டத்தில் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் அறிகுறிகள் இதுவரை இல்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சல் பாதிப்புடன் 90 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வரும் நிலையில் 3 பேருக்கு பன்றிக் காய்ச்சல் மற்றும் ஒருவருக்கு டெங்கு அறிகுறி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் காம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 4 வயதுச் சிறுமி பன்றிக் காய்ச்சலுக்கு பலியானார். கந்தன் என்பவரின் மகளான கவுசல்யா 15 நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் திருவண்ணாமலை தனியார் மருத்துவமனையிலும், அரசு மருதுவமனையிலும் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையிலும் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்த நிலையில் பன்றிக்காய்ச்சலால் சிறுமி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்ட திரையரங்கு உரிமையாளர் சங்க செயலாளராக இருந்தவர் பாலு. பன்றிக்காய்ச்சலால் கடந்த 20 நாட்களாக பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த இவர் திருப்பூர் மற்றும் கோவை தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன் காய்ச்சல் தீவிரமடைந்ததையடுத்து கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிறுவர்கள் உள்ளிட்ட 8 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், டெங்கு பாதிப்பால் ரத்த அணுக்கள் குறைவு காரணமாக மேலும் 2 பேர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக 150க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர்களில் 3 பேருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தற்போது அவர்கள் 3 பேரும் சிறப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவமனை, கதிர்காமம் அரசு மருத்துவமனை, ஜிப்மர் மருத்துவமனைகளில் காய்ச்சல் பாதிப்பால் 70 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 15 பேருக்கு டெங்குவும், 5 பேருக்கு பன்றிக் காய்ச்சலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. 5 பேர் சிக்கன் குனியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு மருத்துவமனையில் தனித்தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஆரம்ப சுகாதர நிலையங்களில் நிலவேம்பு கஷாயம் வழங்குதல் உள்ளிட்ட காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் பாதிப்புடன் 424 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் 2 குழந்தைகள் உட்பட 8 பேருக்கு டெங்கு அறிகுறியும், 13 பேருக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறியும் இருப்பதாகவும், சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

0 Comments

Write A Comment