Tamil Sanjikai

தமிழகம் முழுவதும் பன்றி மற்றும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பன்றிக் காய்ச்சலுக்கு மேலும் 6 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த ராவுத்தூரை சேர்ந்த புஷ்பா என்பவர் கடும் காய்ச்சலால் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனை சென்றுள்ளார். பன்றிக்காய்ச்சல் இருந்ததால் அங்கிருந்து கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். ஆனால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன்பே புஷ்பா உயிரிழந்துள்ளார்.அதுபோல, பீளமேடு பகுதியை சேர்ந்த காயத்ரி என்பவரும் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் பன்றிக்காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த, திருவேடகத்தை சேர்ந்த லட்சுமி சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். இதேபோல் திருமங்கலத்தை சேர்ந்த சுப்புலட்சுமி என்பவரும் பன்றி காய்ச்சலால் அதிகாலையில் உயிரிழந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் தனிப்பிரிவில் இன்றைய நிலவரப்படி 91 பேர் காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டெங்கு காய்ச்சலுக்கு மூன்று பேரும், பன்றிக்காய்ச்சல் அறிகுறியுடன் 6 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பன்றி காய்ச்சல் அறிகுறியுடன் 25 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் உள்ள தனியார் மருத்துவமனைகளில் பலர் காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் அத்தனூரை சேர்ந்த அங்காளி என்ற பெண் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை அவர் உயிரிழந்தார். சேலம் அரசு மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சலுக்கு 7 பேரும், காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்டோரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் பன்றிக் காய்ச்சல் பாதிப்புடன் 8 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திருச்சி அரசு மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக 98 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், நான்கு பேர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றவர்களுக்கு காய்ச்சலுக்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது. நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 19 பேர் பன்றி காய்ச்சல் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், 6 பேருக்கு பன்றி காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. காய்ச்சலுக்கு 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 11 பேர், கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சல் பரிசோதனை செய்துக் கொள்ள நூற்றுக்கணக்கானோர் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். கரூர் அரசு மருத்துவமனையில், காய்ச்சல் காரணமாக 62 பேர் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சல் உள்ளதா என மருத்துவர்கள் தொடர் கண்காணிப்பில் உள்ளனர்.

0 Comments

Write A Comment