லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் குற்றவாளியான சுரேஷ் ஸ்ரீரங்கம் நீதிமன்றம் முன்பு காவல்துறை மீது பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் திருச்சி சமயபுரம் நம்பர் ஒன் டோல்கேட்டில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் சுவரை துளையிட்டு 470 சவரன் நகை, 19 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து 4 தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில் தஞ்சையை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் இந்த கொள்ளை சம்பவத்தில் லலிதா ஜுவல்லரி கொள்ளையர்கள் முருகன், சுரேஷ், கணேஷ் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இந்நிலையில் சுரேஷ் திருவண்ணாமலை செங்கம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். அவரை லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கு தொடர்பாக போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த திருச்சி நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. போலீஸ் காவல் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் சமயபுரம் நெம்பர் 1 டோல்கேட் பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளை தொடர்பாக சுரேஷிடம் விசாரணை நடத்த திருச்சி ஸ்ரீரங்கம் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சுரேஷ் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். 7 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் நீதிமன்றம் அனுமதி மறுத்ததையடுத்து அவரை சிறையில் அடைக்க போலீசார் அழைத்து சென்றனர்.
நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்த சுரேஷ் எனது அம்மா, சின்னம்மா, தம்பி மற்றும் உறவினர்கள் 18 பேரை போலீசார் பிடித்து வைத்துள்ளதாகவும், சரணடைந்தால் அவர்களை விடுவிப்பதாக போலீசார் உறுதி அளித்ததால் தான் சரணடைந்தேன் என்றும் ஆனால் இதுவரை அவர்களை விடுவிக்கவில்லை என்று பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார். இதனால் நீதிமன்ற வாயில் முன்பு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
0 Comments