Tamil Sanjikai

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது தவறு என்று தருண் அகர்வால் தலைமையிலான குழு பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் போராட்டத்தைத் தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. ஆலை மூடப்பட்டதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஸ்டெர்லைட் ஆலைக்குள் செல்ல தமிழக அரசு அனுமதி மறுப்பதாகவும், கழிவுகளை அப்புறப்படுத்துவதற்கான பணிகளை செய்ய உள்ளே செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தது.

இதனைத் தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், ஆலையின் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள அனுமதி அளித்தது. அத்துடன் ஆலையை ஆய்வு செய்ய உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் குழுவை அமைத்தது. இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய தருண் அகர்வால் தலைமையில் அமைக்கப்பட்ட குழு தனது அறிக்கையை 48 கவர்களில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் நேற்று முன்தினம் தாக்கல் செய்தது. அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து ஸ்டெர்லைட் தொடர்பான வழக்கு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் இன்று விசாரிக்கப்பட்டது. அறிக்கையில் ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்ட தமிழக அரசின் முடிவை நியாயப்படுத்த முடியாது என கூறப்பட்டுள்ளதால், இவ்விகாரத்தில் தமிழக அரசு பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.

நீதிபதி தருண் அகர்வால் குழு நிபந்தனையுடன் ஸ்டெர்லைட் ஆலை செயல்பட பரிந்துரை செய்துள்ளது. காற்று மற்றும் நீர் மாசை கண்காணிக்க வேண்டும் என அகர்வால் குழு அறிவுறுத்தியுள்ளது. மேலும் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது நியாயமானது அல்ல என அகர்வால் குழு கருத்து தெரிவித்துள்ளது என ஸ்டெர்லைட் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் விவகாரத்தில் ஆய்வுக்குழு அறிக்கை மீது எந்த பதிலை வேண்டுமானாலும் தமிழக அரசு தாக்கல் செய்யலாம் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது. தமிழக அரசு ஒரு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 7-ஆம் தேதிக்கு பசுமை தீர்ப்பாயம் ஒத்திவைத்துள்ளது.

0 Comments

Write A Comment