Tamil Sanjikai

நீர்நிலைகள் பராமரிப்பு தொடர்பான வழக்கில், தமிழக அரசுக்கு 2 கோடி ரூபாய் அபராதம் விதித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இந்த வழக்கில் பொதுப்பணித்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் உள்ளிட்ட நீர்நிலைகளில் 26 ஆயிரத்து 300 ஆக்கிரமிப்புகள் உள்ளதாகவும், 408 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட நிலையில் வழக்குகள் காரணமாக மற்ற ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. அதனை ஏற்க மறுத்த தீர்ப்பாயம், பொதுப்பணித்துறை முறையாக ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை என்றும், ஆக்கிரமிப்பை அகற்றுவதில் மெத்தனம் காட்டுவதாகவும் கூறி 2 கோடி ரூபாய் அபராதம் விதித்தது.

இதற்கு எதிராக பொதுப்பணித்துறை தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதிகள் தேசிய பசுமைத் தீர்ப்பாய உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்ததோடு பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்த ஜவஹர்லால் சண்முகம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 4 வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.

0 Comments

Write A Comment