Tamil Sanjikai

மறைந்த முன்னாள் தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு அண்ணா அறிவாலயத்தில் 9 அடி உயரத்தில் வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை திறப்பு விழா நாளை மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது. இதில் சோனியா காந்தி கலந்து கொண்டு கருணாநிதி சிலையை திறந்து வைக்கிறார். இதற்காக சோனியா காந்தி டெல்லியில் இருந்து விமானம் மூலம் நாளை மாலை 4.30 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்து, அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் சிலையை திறந்து வைத்து பேசுகிறார்.தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் முன்னிலை வகிக்கிறார். பொருளாளர் துரைமுருகன் வரவேற்று பேசுகிறார். சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. நன்றி கூறுகிறார்.

இந்த விழாவில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசுகிறார்கள். இந்த நிகழ்ச்சி முடிந்ததும் சோனியா காந்தி காரில் மெரீனா கடற்கரைக்கு சென்று கருணாநிதியின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார். அங்கிருந்து ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். கூட்டம் முடிந்ததும் காரில் விமான நிலையம் சென்று இரவு 8 மணியளவில் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.

சோனியா காந்தி வருகையையொட்டி 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். அவர் வந்து செல்லும் அண்ணா அறிவாலயம், கருணாநிதி நினைவிடம், ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடல் ஆகிய இடங்கள் இப்போதே போலீஸ் வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் கருணாநிதி சிலை திறப்பு விழா நிகழ்ச்சியை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் திரண்டிருக்கும் கட்சி நிர்வாகிகள் பார்ப்பதற்கு வசதியாக பெரிய எல்.இ.டி. திரை வைக்கப்படுகிறது.

கருணாநிதியுடன் ரஜினி, கமல் இருவரும் நெருங்கி பழகியவர்கள். அவர்களும் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் விரும்பினார். அதன்படி ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவருக்கும் தி.மு.க., தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. தலைமை கழக செயலாளர் பூச்சி முருகன் நேரில் சென்று இருவரிடமும் அழைப்பிதழ் வழங்கினார். இப்போது ரஜினி கலந்து கொள்வார் என்று உறுதியான தகவல் வெளியாகி உள்ளது. இந்த சூழ்நிலையில் எதிர்க் கட்சிகளை ஒன்றிணைக்கும் விழாவாக நடைபெறும் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ரஜினி பங்கேற்பது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 Comments

Write A Comment