Tamil Sanjikai

கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெற்ற மகாசிவராத்திரி விழாவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைத்தார். விடிய விடிய நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

கோவை வெள்ளியங்கிரி மலையில் உள்ள ஈஷா யோக மையத்தில் சத்குரு ஜக்கி வாசுதேவ் தலைமையில் சிவராத்திரி திருவிழா நடைபெற்றது. நேற்று மாலை ஈஷா மையத்திற்கு வருகை தந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அங்குள்ள சூர்யகுண்டம், நாகா சந்நிதி, லிங்கபைரவி ஆகிய இடங்களைப் பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியா ஆழ்ந்த இறை நம்பிக்கையும், இறையுணர்வும் நிறைந்த நாடு என்று குறிப்பிட்டார். இளைஞர்கள் கையில் நாட்டின் எதிர்காலம் இருப்பதாகவும், அவர்கள் யோகா செய்வது உடல், மனம் இரண்டுக்கும் நல்லது என்று தெரிவித்தார்.

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அமைச்சர்கள் வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோரும் உடன் வந்திருந்தனர்.

மாலையில் தொடங்கிய சிவராத்திரி திருவிழாவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கலைஞர்களின் பாரம்பரிய இசை மற்றும் நடனங்கள் அரங்கேறின. இசையமைப்பாளர் அமித் திரிவேதி, ஹரிஹரன், பாடகர் கார்த்திக் ஆகியோரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது, வந்திருந்தவர்கள் நடனமாடி மகிழ்தனர்.

ஆதியோகியின் சிறப்பு குறித்த பிரத்யேக லேசர் காட்சிகள் இடம்பெற்றிருந்தது பார்வையாளர்களைக் கவர்ந்தது. கலைஞர்கள் நெருப்பில் செய்த வீரதீர சாகச நிகழ்ச்சிகளைக் பார்வையாளர்கள் உற்சாகமடைந்தனர்.

கூடியிருந்த பக்தர்களிடையே பேசிய சத்குரு ஜக்கி வாசுதேவ், யோகா எனும் அற்புதக் கருவியை அறிவியல் பூர்வமாக உலகம் முழுவதும கொண்டு செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இரவு தொடங்கிய கலைநிகழ்ச்சிகள், பாடல்கள், நடனம் ஆகியவை அதிகாலை வரை நீடித்தது.

மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், ஏராளமான நடிகர்- நடிகைகள், முக்கிய பிரமுகர்கள் பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

0 Comments

Write A Comment