Tamil Sanjikai

நிதி நிறுவன அதிபர் செல்வராஜையும், அவருடைய மனைவியையும் கொன்று புதைத்ததாக செல்வராஜின் உடன் பிறந்த அக்காள் கண்ணம்மாள் மற்றும் கண்ணம்மாளின் மருமகன் சதீஷ் என்கிற நாகேந்திரன் ஆகியோரை வெள்ளகோவில் போலீசார் கைது செய்தனர்.

கைதான கண்ணம்மாள் போலீசில் கொடுத்துள்ள பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-

எனது சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம் ஈசநத்தம் அருகே உள்ள தாசநாயக்கனூராகும். என்னை உத்தாண்ட குமாரவலசில் செல்லமுத்துக்கு திருமணம் செய்து கொடுத்தனர். எனக்கு ஒரு மகள். அவளை ஈரோட்டில் திருமணம் செய்து கொடுத்து விட்டேன். அவள் ஈரோட்டில் கணவருடன் வசித்து வருகிறார். எனக்கு பெரிதாக எந்த ஒரு வசதியம் இல்லை. இதனால் இந்த பகுதியில் உள்ள மில்லுக்கு வேலைக்கு சென்று வந்தேன். இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு எனது கணவர் செல்லமுத்து இறந்து விட்டார். இதனால் நான் மட்டும் உத்தாண்டகுமாரவலசில் உள்ள வீ்ட்டில் வசித்து வருகிறேன்.

இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் தாசநாயக்கனூரில் எனது தந்தை பெயரில் இருந்த 4 ஏக்கர் நிலம் எனது தம்பி மகன் பெயருக்கு எனது தந்தை உயில் எழுதி வைத்து விட்டார். அந்த 4 ஏக்கர் நிலத்தை எனது தம்பி ரூ.43 லட்சத்திற்கு விற்றான். இதை அறிந்த நான், தாசநாயக்கனூர் சென்று எனது தம்பியிடம், எனது நிலைமையை எடுத்துக்கூறினேன். உன்னுடன் பிறந்த அக்காள் நான் மிகவும் கஷ்ட நிலையில் வாழ்க்கை நடத்துவதாகவும், மில்வேலைக்கு சென்று பிழைப்பதாகவும், மழை காலத்தில் வீடு ஒழுகுவதை கூட சரி செய்ய முடியவில்லை. அந்த அளவுக்கு வறுமையில் வாடுகிறேன். எனவே நீ விற்பனை செய்த நிலம் மூலம் கிடைத்த பணத்தில் உடன் பிறந்த அக்காளுக்கும் பங்கு உண்டு அல்லவா? எனவே எனக்குண்டான பங்கை கொடு என்று கேட்டேன். ஆனால் அவன் கொடுக்க மறுத்து விட்டான்.

எனவே ரூ.5 லட்சமாவது கொடு என்று கெஞ்சினேன். ஆனால் ரூ.5 லட்சமும் கொடுக்க வில்லை. எனவே ரூ.3 லட்சமாவது கொடு என்றேன். அவனோ, நான் கெஞ்சி போராடிய பிறகு ரூ.1 லட்சம் மட்டும் கொடுத்தான். திருமணம் ஆகும் முன்பு நான் உழைத்து கொடுத்த நிலம் அது. அந்த நிலத்தை விற்ற பணத்தில் எனக்கு ரூ.1 லட்சத்தை மட்டும் கொடுத்து ஏமாற்றி விட்டான். இதனால் எனது தம்பி மீது எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. எனவே அவனை தீர்த்துக்கட்ட முடிவு செய்தேன்.

இந்த நிலையில்தான் எனது தம்பி மகனுக்கு திருமணம் பேசி முடிக்கப்பட்டு இருப்பதும், வருகிற 1-ந் தேதி திருமணம் நடக்க இருப்பதும் தெரியவந்தது. எனவே எப்படியும் எனக்கு அழைப்பிதழ் கொடுக்க வருவான், அப்போது அவனை கொன்று புதைத்து விடவேண்டும் என்று முடிவு செய்தேன்.

அதற்காக எனது மருமகன் சதீஷ் என்ற நாகேந்திரனை உத்தாண்ட குமாரவலசில் உள்ள வீட்டிற்கு வரவழைத்தேன். பின்னர் நானும், அவரும் சேர்ந்து வீட்டின் அருகில் சுமார் 5 அடி ஆழத்திற்கு குழி தோண்டினோம். நாங்கள் குழி வெட்டுவது பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு தெரியாது. ஏன் எனில் அவர்கள் எங்கள் வீ்ட்டிற்கு வர மாட்டார்கள்.

நான் நினைத்தபடி சம்பவத்தன்று இரவு 8.30 மணிக்கு எனது தம்பியும், அவனுடைய மனைவி வசந்தாமணியும் ஒரு காரில் எனது வீட்டிற்கு வந்தனர். அவர்களுக்கு டீ போட்டு கொடுத்தேன். அப்போது எனது மருமகனும் வீ்ட்டில் இருந்தார். பின்னர் ஒரு பத்திரிகையில் செல்வராஜ் எனது பெயரை எழுதி, என் கையில் கொடுத்து, திருமணத்திற்கு கட்டாயம் வந்து விடவேண்டும் என்று கூறி விட்டு, இருவரும் எழுந்து புறப்பட்டனர். அப்போது வீ்ட்டின் கதவை எனது மருமருகன் பூட்டினார். போகும்போது எதற்காக கதவை பூட்டுகிறீர்கள் என்று எனது தம்பி கேட்டான். உங்களை வழி அனுப்பி வைக்கிறோம் என்று கூறினேன். அப்போது பூர்வீக பூமி விற்பனை செய்த பணத்தை எனக்கு ஏன் பங்கு தரமறுத்தாய் என்று கேட்டேன்.

இதனால் எனக்கும், எனது தம்பிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது எனது தம்பிக்கு ஆதரவாக அவனுடைய மனைவியும் பேசினார். இதனால் எனக்குமேலும் ஆத்திரம் ஏற்பட்டது. நாங்கள் கம்பி சுற்றி வைத்து இருந்த பூட்டை எடுத்து செல்வராஜின் பின் தலையில் தாக்கினோம். இதனால் செல்வராஜ் மயங்கி கீழே விழுந்து இறந்தான். அதன்பின்னர் வசந்தாமணியையும், தாக்கினோம். அவளும் மயங்கி விழுந்தாள். பின்னர் அவளை மெத்தைக்கு தூக்கிச்சென்று கத்தியால் கழுத்தை அறுத்தோம். இதில் அவளும் இறந்தாள்.. இதனால் வீடு முழுவதும் ரத்தக்கறையாக படிந்து இருந்தது.

பின்னர் இருவரின் உடலையும், தனித்தனி போர்வையால் போர்த்தி, ஏற்கனவே தயார் நிலையில் தோண்டி வைக்கப்பட்ட குழிக்கு தூக்கிச்சென்றோம். அதில் செல்வராஜின் உடலையும், அதை தொடர்ந்து வசந்தாமணியின் உடலையும் போட்டு புதைத்தோம். வசந்தா மணியை சுற்றிய போர்வைக்குகள் அவர்களை கொலை செய்ய பயன்படுத்திய கத்தி மற்றும் கம்பி சுற்றப்பட்ட பூட்டையும் வைத்தோம். அதை தொடர்ந்து வீ்ட்டில் படிந்து ரத்தக்கறையை கழுவிய பின்னர், ஒரு சேலையில் துடைத்து அந்த சேலையையும் குழியில் வைத்து புதைத்து மண்ணால் மூடினோம். பின்னர் அந்த குழிமேல் அந்த பகுதியில் உள்ள மரக்கிளையை வெட்டிப் போட்டோம்.

பின்னர் எதுவும் நடக்காதது போல் எனது தம்பி வந்த காரில், வீட்டில் ரத்தக்கறை படிந்து இருந்த மெத்தையை தூக்கிப்போட்டு கரூர் சென்றோம். போகும் வழியில் ஒரு மில் அருகே அந்த மெத்தையை தூக்கி வீசி விட்டோம். பின்னர் கரூர் அருகே சுக்காலியூர் சென்று காரை நிறுத்தினோம். பின்னர் காருக்குள் திருமண பத்திரியை சிதறிப்போட்டு விட்டு, காரை சுற்றி மிளகாய் பொடியை தூவினோம். பின்னர் காரை அங்கேயே விட்டு விட்டு, ஈரோடு சென்று விட்டோம். மறுநாள் காலை எனது வீட்டின் அருகில் உள்ளவர்களை செல்போனில் தொடர்பு கொண்டு, எனது மகளுக்கு உடல் நலம் சரியில்லாததால் ஈரோடு சென்று விட்டதாக தெரிவித்தேன். இந்த நிலையில் போலீசார் எங்களை கைது செய்து விட்டனர்.

இவ்வாறு கண்ணம்மாள் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

நிலம் விற்ற பணத்தி்ல் பங்கு கொடுக்காததால், தம்பியையும், அவருடைய மனைவியையும், அக்காள் தனது மருமகனுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0 Comments

Write A Comment