Tamil Sanjikai

ஏலகிரி மலையில் உள்ள விவசாய நிலங்களில் சட்டவிரோதமாக கஞ்சா சாகுபடி உற்பத்தி மற்றும் விற்பனை செய்யப்படுகிறதா என்று டிரோன் கேமரா மூலம் வேலூர் போதைப் பொருள் தடுப்பு பிரிவு 3 டிஎஸ்பிக்கள் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். வேலூர் போதைப்பொருள் தடுப்பு பிரிவு டிஎஸ்பிக்கள் பி.கீதா, ஜூலியர் சீசர், மார்டின் ராபர்ட் ஆகியோர் தலைமையில் ஏலகிரி மலையில் உள்ள அத்தனாவூர், நிலாவூர், மங்கலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள விவசாய நிலங்களில் ஊடுபயிருடன் கஞ்சா சாகுபடி செய்யப்படுகிறதா என டிரோன் கேமரா மூலம் நேற்று சோதனை செய்தனர்.

போதைப் பொருளான கஞ்சா பெரும்பாலும் மலைப் பகுதிகளில் அதிகமாக சாகுபடி செய்யப்படுகிறது. இதனால் தற்போது ஏலகிரி மலை பகுதியில் உள்ள விவசாயிகள் தங்களது ஊடுபயிருடன் கஞ்சா சாகுபடி செய்கிறார்களா? என்பது குறித்து சோதனை செய்யப்பட்டது. அதில் எதுவும் புலப்படவில்லை. மேலும் இந்த பகுதியில் கஞ்சா சாகுபடி செய்வது சட்டத்திற்கு விரோதமானது. அவ்வாறு செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். கஞ்சா மூலம் ஏற்படும் தீமைகள் குறித்தும் விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் எடுத்துரைக்கப்பட்டது. தொடர்ந்து, திருப்பத்தூர் அடுத்த புதூர் நாடு மலைப்பகுதிகளில் இன்று சோதனை நடக்க இருக்கிறது. இதில் வனத்துறையினர், வருவாய்துறையினர், உள்ளூர் போலீசார் உட்பட பலர் சோதனையில் ஈடுபடுகிறார்கள்.

0 Comments

Write A Comment