Tamil Sanjikai

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு பணியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கடந்த 22-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அரசு பணிகள், கல்வி பணிகள் என அனைத்தும் பாதிக்கப்பட்டது.

அடக்கு முறை, எச்சரிக்கையால் தங்களது போராட்டத்தை நசுக்கிவிடமுடியாது என்றும், நாளுக்கு, நாள் போராட்டம் தீவிரமடையும் என்றும் ஜாக்டோ-ஜியோ அறிவித்திருந்தது.

போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளவர்கள் அனைவரும் அதனை கைவிட்டு விட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இந்த கெடு இன்றுடன் முடிவடைகிறது. ஆனால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என அவர்கள் அறிவித்து உள்ளனர்.

அதன்படி பல்வேறு இடங்களில் அவர்கள் போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். போலீசார் சில இடங்களில் கைது நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர். ஆசிரியர்களுக்கு எதிராக மாணவர்கள், பெற்றோர் பல இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டும் வருகின்றனர்.

இந்த நிலையில், ஜாக்டோ-ஜியோ அமைப்பினருக்கு தேர்வுத்துறை ஊழியர்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர். அவர்கள் நாளை முதல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர்.

வருகிற பிப்ரவரி 1ந்தேதி முதல் செய்முறை தேர்வுகள் தொடங்க உள்ள நிலையில், ஊழியர்களின் போராட்டத்தினால் பணிகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

0 Comments

Write A Comment