Tamil Sanjikai

உப்பூர் அனல்மின் நிலைய பணிக்காக கட்டப்படும் பாலத்தினை நிறுத்த கோரி முற்றுகை போராட்டம் நடத்தியவர்கள் மீது போடப்பட்ட வழக்கினை ரத்து செய்ய வலியுறுத்தி கிராமசபை கூட்டத்தை புறக்கணித்த கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம் உப்பூரில் தமிழக அரசு 1,300 கோடி ரூபாய் செலவில் இரு அனல்மின் நிலையங்களை அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த பணிகளுக்காக விவசாயிகளுக்கு சொந்தமான விளை நிலங்களுடன், மேய்ச்சல் நிலங்களும் கையகப்படுத்தப்பட்டதால் இந்த திட்டத்திற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும் இத்திட்டத்தினால் சூற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு மட்டுமில்லாமல் மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் என கடலோர பகுதி மீனவர்கள் புகார் கூறியிருந்தனர்.

எதிர்ப்புகளை கண்டுகொள்ளாமல் அனல்மின் நிலையம் அமைக்கும் பணியில் தமிழக அரசு ஈடுபட்டு வந்தது. இந்நிலையில் அனல்மின் நிலையத்தின் செயல்பட உள்ள கொதிகலனை குளிர்விக்க கடலில் இருந்து நீரை எடுத்து பின்னர் அதனை மீண்டும் கடலில் விட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக கரையில் இருந்து கடலுக்குள் சுமார் 7.5 கி.மீ தூரம் பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

இவ்வாறு கடலுக்குள் அமைக்கும் பாலத்தினால் தங்களின் மீன்பிடி தொழில் பாதிப்புக்குள்ளாகும் எனவும், அனல்மின் நிலையத்தில் பயன்படுத்தப்படும் கடல் நீர் மீண்டும் கடலில் விடப்படுவதால் கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எனவும் கூறி அப்பகுதியில் உள்ள மோர்ப்பண்ணை உள்ளிட்ட கடலோர கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். கடந்த ஆகஸ்ட் 15 அன்று ஊர் முழுக்க கருப்புக்கொடி ஏற்றியிருந்ததுடன் அன்றைய தினம் நடந்த கிராம சபை கூட்டத்தையும் மக்கள் புறக்கணித்தனர்.

இதையடுத்து மாவட்ட ஆட்சியருடன் நடந்த பேச்சுவார்த்தையில் பாலப்பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் அனல்மின் நிலைய பணிகளை மேற்கொள்ளும் தனியார் நிறுவனமோ கடலின் மீது அமைக்கும் பாலத்திற்கான பணிகளை தொடர்ந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கடலோர கிராமங்களை சேர்ந்த மக்கள் பாலம் நடைபெறும் இடத்திற்கு படகுகளில் சென்று முற்றுகை போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக 200-க்கும் மேற்பட்டோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில் காந்தி ஜெயந்தியான இன்று கடலூர் கிராம பஞ்சாயத்தில் கிராம சபை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு ஆர்.எஸ்.மங்களம் வட்டாட்சியர் சாந்தி தலைமை வகித்தார். கூட்டத்தில் பங்கேற்ற கடலோர கிராம மக்கள் தங்கள் மீது போடப்பட்ட வழக்கை திரும்ப பெறுமாறு தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தினர். ஆனால் வட்டாட்சியரோ மாவட்டத்தில் 144 தடை உத்தரவினை மீறி போராட்டம் நடத்தியதால் அவர்கள் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் வாங்கும் தீர்மானத்தை நிறைவேற்ற முடியாது என்றார். இதனால் கோபம் அடைந்த மக்கள், ''144 தடை உத்தரவு தரையில் தானே பொறுந்தும். கடலில் போராடிய எங்களுக்கு எப்படி பொறுந்தும். மேலும் நாங்கள் யாருக்கும் இடையூறு இன்றி கடலில் அமைதி போராட்டம்தானே நடத்தினோம்'' என கேள்வி மேல் கேள்வி எழுப்பினர். இதன் பின் கோட்டாட்சியர் கோபு நடத்திய பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போதும் தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற கிராம மக்கள் உறுதியாக இருந்தனர். இதனால் கிராம சபை கூட்டம் நடத்தாமல் அதிகாரிகள் திரும்பி சென்றனர். இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் உப்பூர் கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

0 Comments

Write A Comment