Tamil Sanjikai

அன்னியச் செலாவணி மோசடி வழக்கில் வரும் 28-ஆம் தேதி வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் ஆஜராக சசிகலாவுக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜெ.ஜெ. டி.வி.க்கு வெளிநாட்டில் இருந்து உபகரணங்கள் வாங்கிய வகையில் அன்னியச் செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக கடந்த 1996-ஆம் ஆண்டு சசிகலா, பாஸ்கரன் உள்ளிட்டோர் மீது அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்தது. சென்னை எழும்பூர் முதலாவது பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் சசிகலா, பாஸ்கரன் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

அமலாக்கத்துறை தரப்பு சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில் சசிகலாவை இன்றைய தினம் நேரில் ஆஜர்படுத்த பெங்களூரு சிறை நிர்வாகத்துக்கு நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் அந்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம், சசிகலாவிடம் காணொளிக் காட்சி மூலம் விசாரணை நடத்த அனுமதி அளித்தது.

இந்நிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது பாஸ்கரன் நேரில் ஆஜரானார். அப்போது உயர்நீதிமன்ற உத்தரவை படிக்க வேண்டியிருப்பதாகத் தெரிவித்த நீதிபதி, தற்போதைய நிலையில் சசிகலாவை வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜர்படுத்த எழும்பூர் நீதிமன்றத்தில் போதிய வசதிகள் இல்லை என்பதால், மே 28-ஆம் தேதி வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் சசிகலாவை ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டார்.

0 Comments

Write A Comment