விஜய் நடித்த சர்க்கார் படத்தில் ஜெயலலிதாவின் இயற்பெயர் என்று கூறப்படும் கோமளவல்லியை எதிர்மறையாக பயன்படுத்தியிருப்பதாகவும், இலவச திட்டங்களுக்கு எதிராக மக்களை தூண்டும் வகையில் காட்சி இருப்பதாகவும் கூறி அ.தி.மு.கவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் சர்கார் படத்தை திரையரங்குகளில் திரையிட முடியாத சூழல் ஏற்பட்டது.
இந்த நிலையில் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க தயாரிப்பு நிறுவனமான சன்பிக்சர்ஸ் முன்வந்தது. இதனைத் தொடர்ந்து நீக்கப்பட்ட காட்சிகளுடன் தணிக்கை சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் இலவச மிக்சி, கிரைண்டர் ஆகியவற்றை நெருப்பில் வீசும் 5 வினாடிக் காட்சிகளை நீக்கியும், கோமளவள்ளி என்ற பெயரில் கோமள என்கிற வார்த்தையை நீக்கியும், பொதுப்பணித்துறை மற்றும் 56 வருஷம் ஆகிய வார்த்தைகளும் ஒலி முடக்கம் செய்யப்பட்டு திரைப்படத்திற்கு தணிக்கை துறை மறுசான்றிதழ் வழங்கியுள்ளது.
இந்த நிலையில் சர்கார் பட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாசை கைது செய்ய வரும் 27-ஆம் தேதி வரை தடை விதித்து சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. சர்கார் திரைப்படத்தில் வன்முறையை தூண்டும் வகையில் காட்சி இருப்பதாக கூறி சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து முன்ஜாமீன் கோரி ஏ.ஆர்.முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தன்மீது தேசத்துரோகம், பொதுமக்களை அச்சுறுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிந்ததாகவும், காவல்துறையின் கைது செய்யக்கூடும் என்பதால் முன் ஜாமீன் அளிக்குமாறும் கோரப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி இளந்தரையன் முன்பு விசாரணைக்கு வந்த போது ஆஜரான அரசு வழக்கறிஞர், சர்க்கார் சர்ச்சை தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் ஏ.ஆர்.முருகதாஸ் கைது செய்யப்படுவாரா? இல்லையா? என தற்போது ஏதும் சொல்ல முடியாது என்று தெரிவிக்கப்பட்டது. அதே சமயம் அரசு இலவசமாக வழங்கும் மிக்சி, கிரைண்டர் போன்றவற்றை உடைக்கும் வகையிலான காட்சி சர்கார் படத்தில் இடம் பெற்று இருப்பது அ.தி.மு.க தொண்டர்கள் மத்தியில் தேவையற்ற பதற்றத்தை உருவாக்குகிறது என்று அரசு வழக்கறிஞர் கூறினார்.
அதனைத் தொடர்ந்து பேசிய நீதிபதி இளந்தரையன், மிக்சி, கிரைண்டரை உடைக்கும் வகையில் காட்சி இருப்பது தான் பிரச்சனையா? இலவச தொலைக்காட்சியையும் உடைப்பது போல் காட்சி இருந்திருந்தால் திருப்தி அடைந்திருப்பீர்களா? என்று அரசு வழக்கறிஞரை பார்த்து கேள்வி எழுப்பினார்.
சினிமாவை சினிமாவாக மட்டுமே பார்க்க வேண்டும் என்று நீதிபதி கூறிய போது பதில் அளித்த அரசு வழக்கறிஞர், ஜெயலலிதாவின் இயற் பெயரான கோமளவல்லி என்பது படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதால் தேவையற்ற பிரச்சனை ஏற்படும் என்று கூறினார். அப்படி என்றால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏதும் ஏற்பட்டுள்ளதா? என்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா? என்றும் நீதிபதி இளந்தரையன் கேள்வி எழுப்பினார். மேலும் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய இடைக்காலத் தடை விதித்த நீதிபதி இளந்தரையன், விசாரணையை வரும் 27-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
0 Comments