ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சரவணபவன் ஹோட்டல் அதிபர் ராஜகோபால் இன்று காலமானார்.
ஜீவஜோதியின் கணவர் பிரான்சிஸ் சாந்தகுமாரை கொலை செய்த வழக்கில், ராஜகோபாலுக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டதை அடுத்து கடந்த 9 ஆம் தேதி நீதிமன்றத்தில் சரணடைந்திருந்தார் ராஜகோபால்.
அவரை புழல் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் ராஜகோபாலின் உடல்நிலை மோசமடைததால், அவர் ஸ்டான்லி அரசு மருத்துவனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு செயற்கை சுவாசம் வழங்கப்பட்டது. ஆனால் அங்கே சரியான மருத்துவ வசதிகள் இல்லாத காரணத்தால் அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற அனுமதிக்கோரி அவரது மகன் சரவணன் மனுதாக்கல் செய்திருந்தார்.
அவரது தற்போதைய உடல் நிலையில் அவரை இடமாற்றுவது சிக்கலானது என ஸ்டான்லி மருத்துவமனை அறிக்கை விடுத்த நிலையில் அதற்கு தான் முழு பொறுப்பேற்று கொள்வதாக ராஜகோபால் மகன் தரப்பு கூற ராஜகோபால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற நீதிமன்றம் அனுமதியளித்தது. அதனையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் அவருக்கு வடபழனியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை நடைபெற்றுவந்தது. ஆனால், அவரது உடல்நலத்தில் முன்னேற்றம் எதுவும் இல்லாமல், அவர் உயிரிழந்ததாக தகவல்கள் வந்துள்ளது.
0 Comments