Tamil Sanjikai

சேலம் மாவட்டம் வலசையூர் அருகே உள்ள காட்டூரை சேர்ந்தவர் கணேசன் (வயது 35). முறுக்கு வியாபாரியான இவர் கடந்த மாதம் மேட்டுப்பட்டி காவலூர் பஸ் நிறுத்தம் அருகே உள்ள வெள்ளக்கரடு என்ற இடத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து காரிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில், கணேசன் அடித்துகொலை செய்யப்பட்டது பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதியானது.

மேலும் கணேசன் விபத்தில் சிக்கி இறந்ததாக சந்தேகிக்கும் வகையில் உடலை ரோட்டில் வீசி சென்றுள்ளனர். இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தியதில் மேட்டுப்பட்டி தாதனூரை சேர்ந்த பிரபல ரவுடியான சேட்டு மகன் கதிர்வேல் (28) என்பவர் தலைமையிலான கும்பல் கணேசனை கொலை செய்தது தெரியவந்தது. இதனால் கதிர்வேல் உள்பட கொலையில் ஈடுபட்ட சிலரை போலீசார் தேடி வந்தனர். இதில் 2 பேர் போலீசில் சரண் அடைந்தனர். தலைமறைவான கதிர்வேல் உள்பட 3 பேரை போலீசார் தொடர்ந்து தேடி வந்தனர். நேற்று முன்தினம் கதிர்வேலை வீராணம் போலீசார் கைது செய்ததாக கூறப்பட்டது. இதுகுறித்து போலீசாரிடம் கேட்டபோது மறுத்தனர்.

இந்த நிலையில், நேற்று காலை குள்ளம்பட்டி ஆலமரத்துக்காடு பகுதியில் கதிர்வேல் பதுங்கி இருப்பதாக இன்ஸ்பெக்டர் சுப்பிரமணிக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, சப்-இன்ஸ்பெக்டர்கள் மாரி, பெரியசாமி ஆகியோர் அங்கு சென்றனர். அப்போது போலீசாரை பார்த்ததும் கதிர்வேல் அங்கிருந்த தப்பி ஓட முயற்சி செய்தார். திடீரென அவருக்கு போலீசார் தன்னை எங்கே கொலை செய்து விடுவார்களோ? என்ற சந்தேகம் ஈர்ப்படவே, அவர் போலீசாரை தாக்கி விட்டு தப்பி செல்ல முடிவு செய்தார்.

உடனே கதிர்வேல் சினிமாவில் வருவது போல கண்ணிமைக்கும் நேரத்தில் போலீசார் சற்றும் எதிர்பாராத வகையில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சப்-இன்ஸ்பெக்டர் மாரி, இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி ஆகியோரை வெட்டி கொலை வெறி தாக்குதல் நடத்தினார். இதில் சுதாரித்த போலீஸ் அதிகாரிகள் கதிர்வேலை தடுக்கமுயன்ற போது அவர்களின் கைகளில் காயம் ஏற்பட்டது. மேலும் தன்னை பிடிக்க முயன்ற சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமியையும் அவர் தாக்க முயன்றுள்ளார்.

இதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, கதிர்வேல் எங்கே போலீசாரை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிடுவானோ? எனக் கருதி தான் வைத்திருந்த துப்பாக்கியால் தற்காப்புக்காக கதிர்வேலை நோக்கி சுட்டார். ஆனால் குண்டு கதிர்வேலின் மார்பின் நடுப்பகுதியில் பாய்ந்தது. இதனால் அவர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து உயிருக்கு போராடினார். பின்னர் சிறிது நேரத்தில் கதிர்வேல் துடிதுடித்து அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா கனிக்கருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சேலம் சரக டி.ஐ.ஜி. செந்தில்குமார் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு தீபா கனிக்கர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

இதனிடையே காயமடைந்த இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, சப்-இன்ஸ்பெக்டர் மாரி ஆகியோர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர்களிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா கனிக்கர், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அன்பு ஆகியோர் உடல் நலம் குறித்து கேட்டறிந்தனர். கதிர்வேலின் உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டது. இதையறிந்து அங்கு வந்த கதிர்வேலின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். ஆஸ்பத்திரியில் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சேலத்தில் பிரபல ரவுடி என்கவுண்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 Comments

Write A Comment