Tamil Sanjikai

நெல்லை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள விக்கிரமசிங்கபுரம் வைத்திலிங்கபுரம் தெருவைச் சேர்ந்தவர் பிச்சமுத்து. இவருடைய மகன் ராஜ். இவர் விக்கிரமசிங்கபுரம் மெயின் ரோடு மூன்று லாம்ப் பஸ் நிறுத்தம் பகுதியில் ரத்தினா என்ற பெயரில் நகைக்கடை ஓன்று வைத்து உள்ளார். நேற்று முன்தினம், இரவு ஊழியர்கள் அனைவரும் வேலை முடிந்து சென்ற பின்னர் இவர் கடையை வழக்கம்போல் பூட்டுப்போட்டு பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார்.

நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து, உள்ளே புகுந்தனர். அங்கு இருந்த தங்க சங்கிலி, மோதிரம், வளையல்கள் உள்ளிட்ட 75 பவுன் தங்க நகைகளையும், 30 கிலோ வெள்ளி நகை, பொருட்களையும் கொள்ளை அடித்தனர். மேலும் கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவின் காட்சிப்பதிவு எந்திரத்தையும் மர்ம நபர்கள் எடுத்துச் சென்று விட்டனர்.

நேற்று காலையில் வேலைக்கு வந்த ஊழியர்கள் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் உடனடியாக கடையின் உரிமையாளர் ராஜ் மற்றும் விக்கிரமசிங்கபுரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். ராஜ் வந்து பார்த்தபோது, கடையில் இருந்த ரூ.30 லட்சம் மதிப்புள்ள தங்கம், வெள்ளி நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து விக்கிரமசிங்கபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவின் காட்சிப்பதிவு எந்திரத்தை மர்ம நபர்கள் எடுத்து சென்று விட்டதால், அருகில் உள்ள கடைகளில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

நெல்லையில் இருந்து கைரேகை பிரிவு நிபுணர் அகஸ்டா கண்மணி தனது குழுவுடன் வந்து நகைக்கடையில் பதிவான ரேகைகளை பதிவு செய்தார். மேலும் நெல்லையில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடந்த நகைக்கடையில் இருந்து மோப்பம் பிடித்து கடையின் பின்புறம் உள்ள தெரு வழியாக மூன்று முறை சுற்றி மீண்டும் கடை முன்பு வந்து நின்று விட்டது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.

இந்த கொள்ளை சம்பவத்தில் பழைய கொள்ளையர்கள் அல்லது வடமாநில கொள்ளையர்கள் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். அதன் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை அள்ளிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். பாபநாசம் அருகே நகைக்கடையில் ரூ.30 லட்சம் தங்கம், வெள்ளி நகைகள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0 Comments

Write A Comment