Tamil Sanjikai

விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் திருச்சியிலிருந்து 5 கோடி ரூபாய் பணத்தை காரில் பதுக்கி கொண்டு செல்வதாக திருச்சி ஐஜி அலுவலகத்தில் இருந்து பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதை அடுத்து நேற்றிரவு பெரம்பலூர் – அரியலூர் இடையே உள்ள பேரளி என்ற இடத்தில் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் இனைந்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளுடன், டாடா சபாரி கார் ஒன்று வந்தது. காரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட முன்னாள் செயலாளர் தங்கதுரை, மாநில நிர்வாகி பிரபாகரன் உள்பட 4 பேர் இருந்தனர்.

அந்த காரில் போலீசார் சோதனையில் ஈடுபட்ட போது பணம் எதுவும் சிக்கவில்லை. இருப்பினும், பணம் காரில் இருப்பதாக மீண்டும் நம்பத்தகுந்த தகவல் போலீசாருக்கு கிடைத்ததாக சொல்லப்படுகிறது. இதை தொடர்ந்து காரை போலீசார் சல்லடையாக ஜலித்து சோதனையில் ஈடுபட்டும் ஒன்றும் கிடைக்கவில்லை

. ஆனாலும் காரில் பணம் இருக்கிறது என்று நம்பத்தகுந்த வ்வட்டாரங்களில் இருந்து தகவல் வந்ததால் விடுதுலைச் சிறுத்தைகள் கட்சி பிரமுகர்கள் வந்த கார் பறிமுதல் செய்யப்பட்டு பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகம் கொண்டு செல்லப்பட்டது. அங்கு வைத்து சுமார் 2 மணி நேரம் சோதனையிட்டும் பணம் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், காரின் பாகங்களில் பணம் பதுக்கப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது, அதனால் கதவு ஒன்றின் பாகங்களை கழற்றி ஆராய்ந்த போது 500 ரூபாய் மற்றும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுடன் கட்டுக் கட்டாக பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதை அடுத்து அனைத்து கதவுகளின் பாகங்களையும் கழற்றி சோதனையிட்ட போலீசார், 2 கோடியே 10 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். அந்தப் பணமானது வருமான வரி உதவி ஆணையரிடம் ஒப்படைக்கப்பட்டது.

காரில் இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட முன்னாள் செயலாளர் தங்கதுரை, மாநில நிர்வாகி பிரபாகரன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தப் பணமானது வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக கொண்டு செல்ல திட்டமிடப்பட்டதா? எந்த தொகுதிக்கு கொண்டு செல்லப்படவிருந்த பணம்? காரில் மறைத்து வைத்து கொண்டு சென்றது ஏன் என்பது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

0 Comments

Write A Comment