Tamil Sanjikai

சென்னை அண்ணா சாலையில் நகைக்கடை நடத்தி வருபவர் தொழில் அதிபர் கிரண் ராவ். இவர் மீது சிலை கடத்தல் தொடர்பாக வழக்கு உள்ளது. இவர் தமிழகத்தில் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களிலும் நகை கண்காட்சி நடத்தி வருகிறார்.

இவருடைய நகைக்கடை சார்பில் மதுரையில் பாரம்பரிய பொருட்கள் மற்றும் நகை கண்காட்சி நடந்தது. கண்காட்சி முடிந்ததும் அந்த நகைக்கடையின் பொது மேலாளர் தயாநிதி மற்றும் ஊழியர்கள் ஒரு காரில் ரூ.11 கோடி மதிப்பிலான நகைகள் மற்றும் ரூ.7½ லட்சம் ரொக்கத்துடன் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

செங்கல்பட்டு அருகே பரனூர் என்ற இடத்தில் வந்த போது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் என்று கூறிய சிலர் அந்த காரை வழிமறித்து சோதனை செய்தனர். அப்போது காரில் இருந்த நகை, பணத்தை எடுத்து சென்றனர். பின்னர் நடத்திய விசாரணையில் மர்ம நபர்கள் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இது குறித்து செங்கல்பட்டு தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டது. சோதனை சாவடிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் கொள்ளை நடந்த அன்று பதிவான காட்சிகளை வைத்து போலீசார் ஆய்வு செய்தனர்.

இந்நிலையில் நேற்று காலை கொள்ளையன் என்று சந்தேகப்படும் நபர் ஒருவரின் புகைப்படத்தை காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி வெளியிட்டார். அப்போது அவர் கூறுகையில், இந்த புகைப்படத்தில் உள்ள நபர் குறித்து யாருக்கேனும் தகவல் தெரிந்தால் காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், செங்கல்பட்டு துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் போன்றவற்றுக்கு தகவல் தெரிவிக்கலாம். இந்த தகவல் ரகசியமாக வைக்கப்படும். தகவல் தருபவர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும் என்றார்.

0 Comments

Write A Comment