Tamil Sanjikai

புதுச்சேரி வாணரப்பேட்டை எல்லையம்மன் கோவில் தோப்பு, 4-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் குமார் என்கிற சாணிக்குமார்(வயது 45). பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்பட 8 வழக்குகள் உள்ளன. கடந்த 1998-ம் ஆண்டு தட்டுவண்டி தொழிலாளி ராஜகோபால் கொலை வழக்கில் ஆயுள்தண்டனை பெற்றார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தண்டனை காலம் முடிவடைந்து சிறையில் இருந்து வெளியே வந்தார்.

இந்த நிலையில் கடந்த 2-ந் தேதி இரவு வாணரப்பேட்டையில் உள்ள காளியம்மன் கோவில் திருவிழாவிற்கு வந்த சாணிக்குமாரை, நள்ளிரவு மர்ம நபர்கள் 10-க்கும் மேற்பட்டோர் அவரை கொலை செய்ய வந்தனர் . அவர்களில் 3 பேர் முகமூடி அணிந்தபடி வந்து சாணிக்குமார் மீது நாட்டு வெடிகுண்டை வீசினர். அந்த குண்டு அவர் மீது படாமல் கோவில் சுவற்றில் விழுந்து வெடித்து சிதறியது. அதில் தப்பிய அவரை அந்த கும்பல் பின்தொடர்ந்து சென்று சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடியது.

இது தொடர்பாக முதலியார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். வாணரப்பேட்டை பகுதியை சேர்ந்த குமரன் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் ஒன்று சேர்ந்து சாணிக்குமாரை வெட்டி கொலை செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் தமிழரசன், வீரபத்திரசாமி மற்றும் சிறப்பு அதிரடிப்படை போலீசார் அவர்களை வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில் குற்றவாளிகள் அனைவரும் வில்லியனூர் பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசாரை பார்த்த உடன் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். இதில் வாணரப்பேட்டை பகுதியை சேர்ந்த குமரன்(34), ரெனோ(21), கணேஷ்(22), பீட்டர்(21), முருகன்(22), பிரதீப் குமார் என்கிற பிரதீப்(23), ரோடியர்பேட் பகுதியை சேர்ந்த சதீஷ் என்கிற சதீஷ்குமார்(26), ஆட்டுப்பட்டியை சேர்ந்த சந்திரன் என்கிற தேவசந்திரன் (35) ஆகிய 8 பேரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

மேலும் விக்கி, குட்டிசிவா, அந்தோணி, பாம்ரவி, சுத்திமணி ஆகிய 5 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கைதானவர்கள் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

நாங்கள் அனைவரும் நண்பர்கள். சில வாரங்களுக்கு முன்பு ஏற்பட்ட ஒரு தகராறில் வாணரப்பேட்டை குமரனை கொலை செய்யும் நோக்கில் அவரது வீட்டில் சாணிக்குமார் வெடிகுண்டு வீசினார். தொடர்ந்து எங்கள் நண்பர்களையும் அவர் மிரட்டி வந்தார். கடந்த 1-ந் தேதி சதீஷ் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அந்த மோட்டார் சைக்கிள் சாணிக்குமார் மீது லேசாக உரசியது. இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

அப்போது சதீசை கொலை செய்து விடுவேன் என்று சாணிக்குமார் மிரட்டினார். இதனால் அதிர்ச்சியடைந்த சதீஷ் எங்களிடம் இது குறித்து தெரிவித்தார். உடனே நாங்கள் இது தொடர்பாக ஜெயிலில் உள்ள மர்டர் மணிகண்டனிடம் கூறினோம். அவர், இனியும் அவனை விட்டு வைக்க வேண்டாம், சதீஷை அவன் கொலை செய்யும் முன்பு அவனை தீர்த்து கட்டிவிடுங்கள் என்று கூறினார்.

எனவே நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து திட்டம் தீட்டி காளியம்மன் கோவில் திருவிழாவின் போது சாணிக்குமாரை கொலை செய்யலாம் என்று முடிவு செய்தோம். பாம்ரவி 5 நாட்டு வெடிகுண்டுகளை தயார் செய்து எடுத்து வந்தார். கடந்த 2-ந் தேதி அன்று கோவில் விழாவில் அனைவரும் மும்முரமாக இருந்தனர்.

நாங்கள் ஆங்காங்கே பிரிந்து நின்றோம். 3 பேர் மட்டும் முகமூடி அணிந்த படி சென்று சாணிக்குமார் மீது நாட்டு வெடிகுண்டை வீசினோம். அது அவர் மீது படவில்லை. உடனே நாங்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டோம். பின்னர் நாங்கள் அந்த பகுதியிலேயே பதுங்கி இருந்தோம். கோவில் விழா முடிந்த பின்னர் சாணிக்குமார் மட்டும் தனியாக வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது அவரை பின்தொடர்ந்து சென்று ஒரு நாட்டு வெடிகுண்டை வீசினோம்.

அவரது அவர் மீது படாமல் சாக்கடையில் விழுந்தது. உடனே அவர் ஓட்டம் பிடித்தார். நாங்கள் அவரை பின்தொடர்ந்து சென்று சுற்றி வளைத்து தலையில் சரமாரியாக வெட்டினோம். அவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். எனவே நாங்கள் 3 நாட்டு வெடிகுண்டை கையோடு எடுத்து சென்று விட்டோம். அங்கிருந்து தப்பி ஓடி வில்லியனூர் பகுதியில் பதுங்கி இருந்தோம். போலீசார் எங்களை கைது செய்தனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதனை தொடர்ந்து கைதான 8 பேரையும் போலீசார் நேற்று மாலை புதுவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

0 Comments

Write A Comment