Tamil Sanjikai

கஜா புயலினால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள சேத விபரங்கள் குறித்து விரிவான அறிக்கை உள்துறை அமைச்சகத்துக்கு விரைவில் அனுப்பி வைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்திற்கு தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உறுதியளித்துள்ளார்.

இந்த நிலையில், தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம், கஜா புயலினால் தமிழகத்தில் ஏற்பட்ட சேதங்கள் குறித்த விபரங்களை கேட்டறிந்ததாக கூறப்பட்டுள்ளது. புயலினால் ஏற்பட்ட சேதங்கள், போர்க்கால அடிப்படையில் நடைபெறும் நிவாரணப் பணிகள் குறித்து விளக்கமாக மத்திய உள்துறை அமைச்சரிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி எடுத்துரைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து 471 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள 82,000 பொதுமக்களுக்கு உணவு, உடை, மருத்துவ வசதிகள் உட்பட செய்யப்பட்டு வரும் அனைத்து நிவாரணப் பணிகள் குறித்தும் முதல்வர் எடுத்துரைத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. கஜா புயலினால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள சேத விபரங்கள் குறித்து விரிவான அறிக்கை உள்துறை அமைச்சகத்துக்கு விரைவில் அனுப்பி வைக்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதனிடையே, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தமது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழகத்தில் புயல் பாதிப்பு பகுதிகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் பேசியதாகக் குறிப்பிட்டுள்ளார். புயல் பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையில், மத்திய அரசு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்கும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் உறுதியளித்திருப்பதாகவும் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். நிலவரத்தை கண்காணித்து, மாநில நிர்வாகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குமாறு மத்திய உள்துறை செயலருக்கு அறிவுறுத்தி இருப்பதாகவும் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

0 Comments

Write A Comment