மதுரையில் சேவல் சண்டை போட்டி நடத்துவதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக ரியல் எஸ்டேட் அதிபர் ஓட ஓட விரட்டி, வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை புதூர் ராமவர்மா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவர் அந்த பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் மற்றும் பணம் கொடுத்தல் வாங்கல் தொழில் செய்து வந்தார். நேற்று கடைக்கு சென்று விட்டு நள்ளிரவு வீடு திரும்பி கொண்டிருந்த போது புதூர் பாரதியார் புரம் பகுதியில் பதுங்கி இருந்த 8 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று அம்மிக்கல்லை இருசக்கர வாகனத்தில் வந்த ராஜா மீது எறிந்தனர்.
இதில் ராஜா நிலைதடுமாறி கீழே விழுந்தார், உடனடியாக அந்த கும்பல் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். உயிருக்கு பயந்து சாலையில் ஓடிய ராஜாவை விடாமல் துரத்தி சென்று வெட்டியதில் ராஜா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டதில், கடந்த 2016ஆம் ஆண்டு சேவல் சண்டை போட்டி நடத்துவதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக ஸ்ரீதர் என்பவரை கொலை செய்த வழக்கில் ராஜாவும் ஐந்தாவது குற்றவாளியாக இருந்துள்ளார். அதற்கு பழிக்குப் பழி தீர்க்கும் நோக்கோடு இந்த கொலை நடந்துள்ளது தெரியவந்தது.
மதுரை மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையரின் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்த நிலையில், கொலை சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராஜாவை ஓட ஓட விரட்டி கொலை செய்த பதறவைக்கு வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
0 Comments