Tamil Sanjikai

கர்நாடக மாநிலத்தில் காவிரியின் குறுக்கே மேகதாதில் 5,912 கோடியில் அணை கட்ட அம்மாநில அரசு முடிவு செய்த நிலையில், மேகதாது திட்டத்திற்கு மத்திய நீர்வளத்துறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும் மத்திய அரசு அனுமதி வழங்கியதற்கு எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. ஏற்கனவே நடைபெற்ற காவிரி வழக்கில், காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட தமிழகம் மற்றும் கேரளாவின் அனுமதியை கர்நாடகா அரசு பெற வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து உச்சநீதிமன்ற உத்தவை மீறி கர்நாடக அரசு செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் முதலமைச்சர் குமாரசாமி தலைமையில் மேகதாது திட்டம் குறித்து முன்னாள் முதலமைச்சர்கள் மற்றும் நீர்ப்பாசனத்துறை அமைச்சர்களின் ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் இன்று நடைபெற்றது. அதில் தமிழக அரசின் எதிர்ப்பை எவ்வாறு எதிர்கொள்வது, திட்டத்தை அடுத்தகட்டமாக எப்படி முன்னெடுத்து செல்வது குறித்து ஆலோசனைகளை நடத்தப்பட்டது. மேலும் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் தலைமையிலான குழு, நாளை மேகதாதுவுக்கு சென்று நேரில் ஆய்வு செய்ய உள்ளது

இந்நிலையில் ,400 மெகா வாட் மின்சாரம் தயாரிக்கவே மேகதாது அணை கட்டுகிறோம் என கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவகுமார் பெங்களூரில் பேட்டியளித்துள்ளார். மேகதாது அணையால் ஒரு ஏக்கர் நிலத்தை கூட பாசானவசதிக்கு பயன்படுத்த மாட்டோம். மேலும் எங்களது அதிகாரத்தை எக்காரணம் கொண்டும் தவறாக பயன்படுத்த மாட்டோம் என்றும் நாங்கள் அனைவரும் சகோதரர்கள் சண்டையிட விரும்பவில்லை என அமைச்சர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.

0 Comments

Write A Comment