கஜா புயல் கரையை நெருங்குவதை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டத்தில் வருவாய்த்துறை, காவல்துறை, கடலோரக் காவல்படை, பேரிடர் மீட்புக் குழு ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் தயார் நிலையில் உள்ளனர். கஜா புயல் பற்றிய எச்சரிக்கை வந்ததில் இருந்து 4 நாட்களாக மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. ஆயிரத்து ஐந்நூற்றுக்கு மேற்பட்ட விசைப்படகுகள் பாம்பன், குந்துக்கால் ஆகிய இடங்களில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன் லேசான மழைத் தூறல் தொடங்கியுள்ளது.
பாம்பன் துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மாவட்டத்தின் 39 தாழ்வான பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 23பன்னோக்குப் புயல் பாதுகாப்பு மையங்கள், பள்ளி கல்லூரிக் கட்டடங்கள், சமூகநலக் கூடங்கள் என மொத்தம் 148புயல் பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளன. புயல் முன்னெச்சரிக்கையால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கஜா புயல் கரையைக் கடக்கும் நாகை மாவட்டத்தில், முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாகை மாவட்டத்தில் 75 பேர் கொண்ட பேரிடர் மீட்புக் குழுவும், ஃபர்ஸ்ட் ரெஸ்பாண்டர்ஸ் எனும் பயிற்சி பெற்ற தன்னார்வலர்கள் 4 ஆயிரத்து 500 பேரும் மீட்புப் பணிக்குத் தயார் நிலையில் உள்ளன. பள்ளி, கல்லூரிகளுக்கு ஏற்கெனவே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாகையில் தாழ்வான, பாதிக்கக்கூடிய பகுதிகளாக 38 பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில் 86 ஆயிரத்து 964 பேர் வசிப்பதால் அவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கும் முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
பொதுமக்களை தங்கவைக்க 9 பன்நோக்கு பேரிடர் மையம் தயார் நிலையில் உள்ளன. 22 புயல்பாதுகாப்பு மையங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரிகள், சமூக நலக் கூடங்கள், திருமண மண்டபங்கள் என 627 பொதுக்கட்டிடங்கள் நிவாரண முகாம்களுக்காக திறக்கப்பட்டுள்ளன. தேவையான உணவு, குடிநீர் ஏற்பாடு செய்ய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். 29 நடமாடும் மருத்துவக் குழுக்களும் தயார் நிலையில் உள்ளன.
அரசு பெண் பணியாளர்கள் 653 பேர் முதல் நிலை பொறுப்பாளர்களாக முன்னெச்சரிக்கைப் பணிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். அரசுப் பணியாளர்கள் உள்ளிட்ட 4 ஆயிரத்து 454 பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கால்நடைகளுக்காக 2 ஆயிரத்து 20 பொறுப்பாளர்களும், கால்நடை மருத்துவர்கள் அடங்கிய 28 குழுக்களும், அவற்றுக்கான 212 மையங்களும் தயாராகி வருகிறது. தீயணைப்புத்துறை தலா 10 நபர்கள் உள்ளடக்கிய 9 குழுக்களாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநில பேரிடர் பயிற்சி பெற்ற தலா 10 காவலர் அடங்கிய 8 குழுக்கள் பணியாற்றும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. தமிழக மின்வாரியம் மூலம் 6 ஆயிரம் மின்கம்பங்கள் தயார் நிலையில் உள்ளன. மீன்வளத்துறை மூலம் 54 படகுகளும் மீட்புக்குத் தயாராக உள்ளன.
1 லட்சத்து 19 ஆயிரத்து 830 மணல் மூட்டைகள் தயார்படுத்தப்பட்டுள்ளன. புயலால் சேதமடையும் மரம், கட்டிடங்களை அகற்ற 88 ஜேசிபி இயந்திரங்களும், 56 மர அறுக்கும் கருவிகள் தயார் நிலையில் உள்ளன. நாகையில் காலை முதலே கடல்சீற்றமாக காணப்படுகிறது. நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் கடல் சீற்றம் காரணமாக சுற்றுலாப் பயணிகள் கடற்கரைக்கு அனுமதிக்கப்படவில்லை. அங்கிருந்து கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில் அப்பகுதியில் இருக்கும் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள், மீனவர்கள், வியாபாரிகள் உள்ளிட்ட அனைவரும் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். மேலும் கடற்கரை பகுதிக்குச் செல்லும் வழியில் வாகன போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.
கஜா புயலால் தூத்துக்குடி மாவட்டத்தில் பாதிப்பு இருக்காது என மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி கூறியுள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புயலால் பாதிப்பில்லை என்ற போதிலும் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், காவல்துறை, தீயணைப்புத்துறை, சுகாதாரத்துறை, உள்ளாட்சிதுறை, உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் தயார் நிலையில் உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
நாகை துறைமுகத்தில் 3ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டிருந்த நிலையில் தற்போது 10ம் எண் புயல் கூண்டாக மாற்றப்பட்டுள்ளது. காற்றின் வேகம் மணிக்கு 120 கி.மீ முதல் 220 கி.மீ வரை இருக்கும் எனவும், அதி தீவிர புயல் நெருங்கி வருவதை குறிக்கவே 10ம் எண் புயல் கூண்டு ஏற்றப்படுவது வழக்கம். இதனையடுத்து கடலூர் துறைமுகத்தில் 9ம் எண் புயல் கூண்டு எச்சரிக்கை ஏற்றப்பட்டுள்ளது, தீவிர புயல் நெருங்கி வருவதை குறிக்கும் 9ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
0 Comments