Tamil Sanjikai

ஹிந்தி திணிப்பு கருத்துக்கு எதிராக திமுக அறிவித்திருந்த போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைக்கப்போவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 15ம் தேதி ஹிந்தி தினத்தை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 'நாடு முழுவதும் ஒரே மொழியாக ஹிந்தி இருக்க வேண்டும்' என்று கூறியிருந்தார். இதற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தங்களது கண்டனத்தை பதிவு செய்திருந்தன.

இதைத் தொடர்ந்து வருகிற 20-ஆம் தேதி அமித்ஷாவின் இந்த கருத்துக்கு எதிராக திமுக போராட்டம் நடத்தும் என்று அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்த சூழ்நிலையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சென்னை ராஜ்பவனில் ஸ்டாலின் இன்று சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், "கவர்னர் அழைப்பின் பெயரிலேயே இன்று அவரை சந்தித்தேன். வருகிற 20-ஆம் தேதி திமுக நடத்த உள்ள ஆர்ப்பாட்டம் குறித்து அவர் என்னிடம் கேட்டறிந்தார். மேலும், அமித்ஷாவின் கருத்தானது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. மத்திய அரசு ஒருபோதும் தமிழகத்தில் இந்தியை திணிக்காது என்று கவர்னர் உறுதியளித்துள்ளார்.

தமிழகத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடத்தினால் அது இந்திய அளவில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும், எனவே போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைக்க வேண்டுமென்று கவர்னர் கோரிக்கை விடுத்தார் அதன் அடிப்படையில் கண்டன ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது அதே நேரத்தில் எந்த ஒரு சூழ்நிலையிலும் மத்திய அரசு தமிழகத்தில் இந்தியை திணிக்க முயற்சித்தால் அதனை திமுக என்றுமே எதிர்க்கும்" என்று தெரிவித்துள்ளார்.

0 Comments

Write A Comment