பொள்ளாச்சியில் மாணவிகள், இளம்பெண்களை ஏமாற்றி காதல் வலையில் வீழ்த்தி, சீரழித்த வழக்கில் பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியை சேர்ந்த நிதி நிறுவன அதிபர் திருநாவுக்கரசு (வயது 27), அவருடைய நண்பர்கள் என்ஜினீயர் சபரிராஜன் (27), சதீஷ் (27) மற்றும் வசந்தகுமார் (27) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. பிரிவுக்கு மாற்றப்பட்டது.
இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் தலைமையில், போலீசார் இந்த வழக்கில் விசாரணை நடத்திய போலீசாரிடம் வழக்கு குறித்து விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே இவ்விவகாரத்தில் குற்றவாளிகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க கோரியும், குற்றம் செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க கோரியும் கடந்த இரண்டு நாட்களாக மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில்,பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பழனி - உடுமலை சாலையில் 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல் தஞ்சையிலும் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து விட்டு பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து குற்றச்செயலில் ஈடுபட்டவர்களுக்கு கடும் தண்டனை விதிக்ககோரியும் தஞ்சையில் கல்லூரி மாணவிகள் ஏராளமானோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த விவகாரத்தில் போராட்டத்தை தடுக்க பொள்ளாச்சியில் சில தனியார் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. உடுமலை சாலை, பாலக்காடு சாலையில் உள்ள தனியார் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுதவிர பொள்ளாச்சியில் புகாரளித்த மாணவியின் வீடு இருக்கும் பகுதி, பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நகரின் முக்கிய பகுதிகளில் 350 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
0 Comments