கஜா புயலால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு முழுமையாக மின்சாரம் வழங்குவதற்கு ஒரு வாரம் காலம் தேவைப்படுகிறது என்று தமிழக அரசு, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவித்துள்ளது. நவம்பர் 15-ஆம் தேதி, நாகப்பட்டினம் அருகே கரையைக் கடந்த கஜா புயல் டெல்டா மாவட்டங்களில் பெரும் சேதங்களை ஏற்படுத்தியது. அந்த கஜா புயலால் சுமார் 13 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மின் கம்பங்கள் அனைத்தும் சரிந்து விழுந்ததால் அந்த மாவட்டங்களிலுள்ள கிராமங்களில் முற்றிலுமாக மின்தடை ஏற்பட்டது. இன்னும் பல கிராமங்களுக்கு மின் இணைப்பு வழங்கப்படவில்லை.
இதற்கிடையில், கஜா புயல் பாதித்த பகுதிகளை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும், இழப்பீடுகளை அதிகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது மின்சாரம் வழங்குவது குறித்து பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், “புயல் பாதித்தப் பகுதிகளில் 100 சதவிகிதம் குடிநீர் வழங்கப்படுகிறது. இழப்பீடுகள் வழங்குவதற்கு ஆதார் எண் தேவைப்படுகிறது. ஆதார் கார்டு இல்லாதவர்கள் உடனடியாக ஆதார் கார்ட்டை பெறுவதற்கு சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புயல் பாதித்த பகுதிகளுக்கு முழுமையாக மின்சாரம் வழங்குவதற்கு ஒரு வார காலம் தேவைப்படுகிறது” என்று தெரிவித்தார்.
அப்போது, புதுக்கோட்டையில் 2 லட்சம் வீடுகள் புயலால் பாதிக்கப்பட்டிருந்தது என்று கணக்கெடுத்திருந்த நிலையில், தற்போது 50,000 வீடுகள் மட்டுமே புயலால் பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறி அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படுகிறது என்று பொதுமக்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட வீடுகள் அனைத்துக்கும் இழப்பீடு வழங்க வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் சிறப்பு முகாம்கள் அமைத்து இழப்பீடுகளை சரியாக கணக்கிட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
0 Comments